

மூடப்பட்டுள்ள சுற்றுலா தலங்கள் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் திறக்கப்படும் என நம்பிக்கை கொண்டிருந்த நிலையில்,31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்துள்ளதால், வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்துள்ளதாக சுற்றுலா சார்ந்த தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மாமல்லபுரத்தில் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் சுற்றுலா சீசன் களைகட்டி காணப்படும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூட்டம், கூட்டமாக வந்து தங்கி செல்வர். சுற்றுலா பயணிகளுக்கு கலைச் சின்னங்களின் வரலாற்று தகவல்களை விவரித்து சுற்றுலா வழிகாட்டிகள் வருவாய் பெற்று வந்தனர். மேலும், கடல் சார்ந்த சிப்பி, சங்கு மற்றும் பல்வேறு கைவினை பொருட்களை தயாரித்து சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்து நரிக்குறவர்கள் உள்ளிட்ட சிறு வியாபாரிகள் வருவாய் பெற்றனர்.
நிவாரண உதவி தேவை
ஆனால், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையால் கடந்த 5 மாதங்களாக சுற்றுலாத் துறை முடங்கியுள்ளது. இதனால், சுற்றுலாவை சார்ந்திருந்த சிறு வியாபாரிகள், நரிக்குறவர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் வருவாய் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், தொற்று குறைந்து ஜூலை மாதத்தின் இறுதியில் ஊரடங்கு விலக்கப்படும் என சுற்றுலா சார்ந்த தொழிலாளர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
இந்நிலையில், தமிழக அரசு ஆகஸ்ட் 31-ம் தேதி வரையில் ஊரடங்கை நீட்டித்துஉத்தரவிட்டுள்ளது. இதனால், தங்களின்வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்துவிட்டதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, தங்களுக்கு சுற்றுலாத் துறைமூலம் நிவாரண உதவிகள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.