Published : 31 Jul 2020 06:34 AM
Last Updated : 31 Jul 2020 06:34 AM

கூட்டாட்சி கோட்பாடுகளை சீர்குலைக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு

சென்னை

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தி.க தலைவர் கி.வீரமணி: மிகமுக்கியமான கொள்கை முடிவுகளை எடுக்கும்போது மாநிலஅரசின் கருத்தை கேட்காமல் ஒருசார்பாக மத்திய அரசு முடிவெடுத்துள்ளது கண்டிக்கத்தக்கது. மறைமுகமாக சம்ஸ்கிருதத்தை திணிக்கவும் முயற்சி நடக்கிறது. இக்கொள்கையை தமிழக அரசு ஏற்கக்கூடாது.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான கல்விவழங்க எவ்வித வாய்ப்புகளும் இக்கொள்கையில் இல்லை. எனவே, இதை உடனே நிறைவேற்றாமல் அனைத்து மாநில அரசுகளுடன் விவாதித்து பிறகு அமல்படுத்த வேண்டும்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: கரோனா துயர சூழலைபயன்படுத்திக்கொண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் நீண்டகால திட்டங்களுக்கு மத்திய பாஜகஅரசு, செயல்வடிவம் கொடுக்கிறது. ஒரே நாடு, ஒரே கல்வி முறைஎன்ற கோட்பாட்டை செயல்படுத்தி, பன்முகத் தன்மை, கூட்டாட்சிக் கோட்பாடுகளை சீர்குலைக்கும் புதிய கல்விக் கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: 3-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தி ஏற்கெனவே படிப்பவர்களையும் இடைநிறுத்தம் செய்யவே இக்கொள்கை வழிவகுக்கும். கல்வியை காவிமயமாக்கும் நோக்குடன் கொண்டுவரப்படும் இக்கொள்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழகத்தின் ஒன்றுபட்ட கருத்தை மத்திய அரசுக்கு தெரிவிக்கும் வகையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.

பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி: கல்லூரி, பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இதனால், கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். உயர்கல்வி ஒழுங்குமுறைகள் தனியாருக்கு சாதகமாக உள்ளதால், உயர்கல்வி தனியாரிடம் சென்றுவிடுமோ என சந்தேகம் ஏற்படுகிறது. இக்கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும். கோத்தாரி கமிஷனின் பரிந்துரைகளை சேர்க்க வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: புதிய நவீன இந்தியாவை, அறிவாற்றல் மிக்க இளைஞர் சமுதாயத்தை உருவாக்கும் லட்சியத்தோடு கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. இது பாராட்டுக்குரியது. வரவேற்கப்பட வேண்டியது.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: புதிய கல்விக் கொள்கையை நாடாளுமன்றத்தில் வைத்து முறைப்படி விவாதித்து, உரிய திருத்தங்கள் செய்து செயல்படுத்துவதற்கு பதிலாக, கரோனா பேரிடர் காலத்தில் அவசர கதியில் செயல்பாட்டுக்கு கொண்டுவந்திருப்பது ஏற்புடையது அல்ல.

மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி: மும்மொழி கல்வி திட்டம் என்ற பெயரில் மொழி ஆதிக்க திணிப்புக்கு திட்டமிடுவது தெளிவாக தெரிகிறது. மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிபோகும்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன்: பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களை வஞ்சித்து சமூகநீதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் இக்கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x