

பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்களின் கரைகள் பல்வேறு இடங்களில் சரிந்துள்ளன. இதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து அனுப்பப்பட்ட கிருஷ்ணா நீர் கடந்த ஜூன் மாத இறுதியில் நிறுத்தப்பட்டது. இதனால், பூண்டி ஏரியின் நீர் இருப்பு கணிசமாக குறைந்தது. நேற்றைய நிலவரப்படி 88 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு குறைந்தது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, பூண்டி ஏரியிலிருந்து, செம்பரம்பாக்கம் ஏரிக்கு இணைப்புக் கால்வாயில் தண்ணீர் திறப்பது கடந்த 50 நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு புழல் ஏரிக்கு கால்வாயில் நீர் திறப்பதும் நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது 11,257 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சென்னைக்கு குடிநீர் தரும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய முக்கிய ஏரிகளில் 4,543 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
மீண்டும் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டால், பூண்டி ஏரிக்கு வரும் கிருஷ்ணா நீர், அங்கிருந்து, செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு முழுமையாகச் சென்று சேராத வகையில், பல்வேறு இடங்களில் கால்வாய் கரைகளில் மண் சரிந்துள்ளது.
எனவே, பூண்டியிலிருந்து செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு செல்லும் கிருஷ்ணா கால்வாய்களில் பல்வேறு இடங்களில் சரிந்துள்ள கரைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.