

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இணை நோய்கள் இல்லாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெற்று வரும் கரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், அத்துறைகளின் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
சென்னையில் கரோனா தொற்றைக் கண்டறிய தினமும் சராசரியாக 12 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. கரோனா தொற்று உடைய மற்ற வியாதிகள் இல்லாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மையங்களில் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், அவர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் இவர்களின் இருப்பிடத்தை களப் பணியாளர்கள் பார்வையிட்டு வருகின்றனர். தேவைப்படின் அவர்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். வீடுகளில் சிகிச்சை பெறுவோரின் தொலைபேசி மூலமாக மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 1,958 பேர் பயன்பெற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதும் அனைத்து உள்ளாட்சிகளிலும், பொது இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை 100 சதவீதம் உறுதி செய்ய வேண்டும். தினசரி காய்கறி சந்தைகளின் செயல்பாடுகள் மற்றும் தெருக்களில் தள்ளு வண்டிகளில் விற்கப்படும் காய்கறிகளின் விலை நியாயமானதாக உள்ளதா என கண்காணிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலர் ஹர்மந்தர் சிங்,மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், நகராட்சி நிர்வாக ஆணையர் கா.பாஸ்கரன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் கே.எஸ்.பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.