கைது நடவடிக்கையின்போது உச்ச நீதிமன்ற உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்: போலீஸாருக்கு டிஜிபி அறிவுறுத்தல்

ஜே.கே.திரிபாதி
ஜே.கே.திரிபாதி
Updated on
1 min read

கைது நடவடிக்கையின்போது, உச்ச நீதிமன்ற உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று போலீஸாருக்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம், தமிழக காவல்துறைக்கு எதிராக சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, கைது செய்யும் முறைகளில் சில விதிமுறைகளை பின்பற்றக் கோரி, அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

2014-ம் ஆண்டு பிஹார் அரசு தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘7 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான தண்டனை பெறும் குற்றங்களில் ஈடுபடுபவர்களை தகுந்த காரணங்கள் அல்லது முகாந்திரம் இல்லாமல் கைது செய்யக் கூடாது’ என தெரிவித் துள்ளது.

மேலும், விசாரணை அதிகாரி யாக உள்ளவர், குற்றங்களுக்கான தன்மையை ஆராய்ந்து, குற்றவாளிகள் கைது செய்யப்படுவதற்கான அவசியம் ஏற்பட்டால் அதை எழுத்து மூலமாக பதிவு செய்த பின்பே கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இதை முறையாக செய்யாத விசாரணை அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும்.

கைதானவர்களை நீதித்துறை நடுவர்களிடம் ஆஜர்படுத் தும்போது அவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற முழு விவரத்தையும் விளக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் இயந்திரத்தனமாக செயல்படும் விசாரணை அதிகாரிகள் மீது உயர் நீதிமன்றம் மூலம் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை, தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இதை மீறினால் அவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in