Published : 30 Jul 2020 21:02 pm

Updated : 30 Jul 2020 21:02 pm

 

Published : 30 Jul 2020 09:02 PM
Last Updated : 30 Jul 2020 09:02 PM

மழலையர் பருவத்தில் முறைசார்ந்த கல்வி; 3,5,8-ம் வகுப்புகளுக்குத் தேர்வு: புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து திமுக தீர்மானம்

formal-education-in-kindergarten-exam-for-3rd-5th-8th-classes-dmk-resolution-against-new-education-policy

சென்னை

கரோனா பேரிடர் அனைத்து மாநிலங்களிலும் ஊடுருவி மக்களை வதைத்துவரும் இந்த நேரத்தில், மக்கள் பிரதிநிதிகளின் விவாதத்திற்கே இடம் அளிக்காமல் பல மக்கள் விரோதச் சட்டங்களை விவாதமில்லாமல் நிறைவேற்றுவதா என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நடந்தது.


இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

கலைஞர் நினைவு நாள்

கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் வருகின்ற 7.8.2020 அன்று வருவதையொட்டி; மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் ஐந்து முறை முதல்வராக இருந்த தனது ஆட்சிக் காலத்தில் சிந்தித்துச் சிந்தித்து தமிழகத்தில் கட்டமைத்த - அந்த மகத்தான தலைவரின் மாபெரும் பணிகளை, அற்புதமான அரிய சாதனைகளை பெருமையுடன் நினைவு கூர்கிறது.

தலைவரின் இரண்டாவது நினைவு தினமான 7.8.2020 அன்று, நோய்த் தொற்றிலிருந்து தமிழக மக்களைக் காப்பாற்றிட இரவு பகல் பாராது கண் துஞ்சாது தங்களின் குடும்ப சுகதுக்கங்களை எல்லாம் துறந்து மறந்து, தியாக உணர்வுடன் பணியாற்றிய - பணியாற்றிவரும் “கரோனா போராளிகள்” என்று அழைக்கப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை ஊழியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் சிறப்பு செய்வதென்றும்; வாழ்வாதாரத்தைத் தொலைத்துவிட்டு ஆங்காங்கே வறுமையின் கோரப்பிடியில் சிக்கிச் சுழலும் ஏழை எளியவர்களுக்கு, நலத்திட்ட உதவிகளை வழங்குவதென்றும், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

“கலைஞர் வழி நின்று ஸ்டாலின் பெற்ற சமூக நீதி வெற்றிக்குப் பாராட்டு!”

“மத்தியத் தொகுப்பிற்கு” தமிழ்நாடு அளிக்கும் மருத்துவக் கல்வி இடங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு உரிமை உண்டு” - “இட ஒதுக்கீடு கோரிக்கை ஆதாரபூர்வமானது” (not bereft of substance) என்று, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு அளித்துள்ள தீர்ப்பினை மனப்பூர்வமாக வரவேற்கும் மாவட்டச் செயாலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அடங்கிய இந்தக் கூட்டம், திமுக தொடுத்த சமூக நீதி சட்டப் போராட்ட வழக்கில் - இந்தத் தலைமுறை மட்டுமின்றி - எதிர்காலத் தலைமுறையையும் காப்பாற்றும் போற்றுதலுக்குரிய சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது என்றும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களின் வயிற்றில் பால் வார்த்திருக்கின்ற தீர்ப்பு என்றும் பெருமிதம் கொள்கிறது.

மறைந்த தலைவர் கலைஞரின் வழியில் நின்று இன்றைக்கு அயராது போராடி இந்த வழக்கில் சமூக நீதிக்கான நீதித் துறையின் உறுதியைப் பெற்றிருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இந்தக் கூட்டம் பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

அரசியல் ரீதியாக பிரதமருக்கும், அனைத்துக் கட்சிகளின் அகில இந்தியத் தலைவர்களுக்கும் கடிதம் எழுதி கோரிக்கை விடுத்தும், அதே நேரத்தில் உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் சட்டப் போராட்டம் நடத்தியும் பெற்றுள்ள சமூக நீதிக்கான வெற்றி; திமுகவின் 21-ம் நூற்றாண்டு வரலாற்றில் மிக முக்கியமான அத்தியாயம் என்று இக்கூட்டம் பெருமை கொள்கிறது.

மத்திய அரசு, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர், இந்திய மருத்துவக் கழகம் மற்றும் பல் மருத்துவக் கழகச் செயலாளர்கள் ஆகியோர் அடங்கிய கூட்டத்தைக் கூட்டி - அதில் தமிழ்நாட்டிலிருந்து மத்தியத் தொகுப்பிற்கு அளிக்கப்படும் மருத்துவ இடங்களில் இட ஒதுக்கீடு வழங்க அளித்துள்ள இந்தத் தீர்ப்பினை நிறைவேற்றுவது குறித்த வரைமுறைகள் (Terms of Implementation) வகுக்க வேண்டும் என்று தெளிவுபட தீர்ப்பளித்துள்ளதையும், “மத்திய அரசையோ, இந்திய மருத்துவக் கழக்தையோ, ஏதோ தேர்தல் அறிக்கையில் சொன்னது குறித்து முடிவு எடுங்கள் (Not asking the Govt of India or Medical Council of India to take a decision on some manifesto) என்று நாங்கள் கூறவில்லை.

மத்திய அரசு இந்த நீதிமன்றம் முன்பும், ஏற்கனவே உச்ச நீதிமன்றம் முன்பும் பிரமாண வாக்குமூலத்தில் உறுதியாக ஒப்புக்கொண்ட இட ஒதுக்கீடு (firm commitment to a proposal by way of a solemn affidavit before this Court preceded by a similar affidavit before the Apex Court) பற்றித்தான் முடிவு எடுக்கச் சொல்கிறோம்” - என்று பொருள் பொதிந்த - பொன்னான வரிகளை மத்திய பாஜக அரசு மனதில் நிறுத்தி - உடனடியாகக் கூட்டத்தைக் கூட்டி மத்தியத் தொகுப்பிற்கு மாநிலங்கள் அளிக்கும் மருத்துவக் கல்வி, முதுநிலை மருத்துவக் கல்வி ஆகியவற்றில் இந்தக் கல்வியாண்டே பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டினையும், பட்டியலின மாணவர்களுக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டையும் வழங்கிட வேண்டும் எனவும், மாநில மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளரை அழைத்துப் பேச வேண்டும் என்று உயர் நீதிமன்றமே கூறியிருப்பதால் - மத்திய அரசின் அழைப்பிற்காகக் காத்திராமல் - தனது கூட்டணிக் கட்சியாக இருக்கும் பாஜகவின் பிரதமருக்கு உடனடியாக முதல்வர் அழுத்தம் கொடுத்து இந்தக் கல்வியாண்டிலேயே இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை-2020-ஐத் திரும்பப் பெறுக

நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாழ்படுத்தும் வகையில் - கரோனா பேரிடர் கால நெருக்கடியிலும் - விவசாயிகளின் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய, “மின்சார திருத்தச் சட்ட மசோதா 2020”, “அத்தியாவசிய திருத்தச் சட்டம்”, “வேளாண் உற்பத்தி ஊக்குவிப்புச் சட்டம்”, “விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் வழங்கும் வேளாண் சேவைகள் திருத்தச் சட்டம்” ஆகிய அவசரச் சட்டங்களை, நாடாளுமன்றம் அமர்வில் இல்லாத நேரத்தில் நிறைவேற்றிய மத்திய அரசுக்கு இந்தக் கூட்டம் கண்டனம் தெரிவிப்பதுடன் - எதேச்சதிகார நெடி நிறைந்த இந்தச் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும் இந்தியாவுக்குப் போதும் என்று நினைக்கும் அளவிற்கு, அவற்றுக்கு அடுத்தடுத்த சலுகைகளை வாரி வழங்கி வருகிறது மத்திய பாஜக அரசு.

தற்போது, “புதிய சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை -2020”-ஐ வெளியிட்டு - அதன்மீது “கருத்துக் கேட்பு” என ஒரு கண்துடைப்பு நாடகத்தையும் நடத்த முனைந்திருப்பதற்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தற்போது நடைமுறையில் உள்ள “2006-ம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை”யே இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் இல்லாத திட்டங்களை நிறைவேற்றவும் வழி வகுக்கவில்லை என்று, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எல்லாம் குறைசொல்லி குற்றம்சாட்டி வருகின்ற நிலையில் - இப்போது வெளியிடப்பட்டுள்ள புதிய வரைவு அறிக்கை, “சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986”-ஐ நீர்த்துப் போக வைக்கும் ஒரு அராஜகமான நடவடிக்கை என்று இக்கூட்டம் கருதுகிறது.

தமிழகத்தில் சேலம் - சென்னை பசுமை வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக மக்கள் தீவிரமாகப் போராடுகிறார்கள். அந்தத் திட்டத்திற்கு விவசாயிகளின் நிலங்களை எடுக்கும் முன்பு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தின் முன்பே கொஞ்சம் கூட கருணையற்ற முறையில் மத்திய அரசு வாதிடுகிறது. அதை அதிமுக அரசும் ஏற்றுக் கொள்வதைப் போல வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதி காக்கிறது.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகம் அணைகட்டக் கூடாது என்று ஒட்டுமொத்தத் தமிழகமே எதிர்க்கிறது. காவிரி டெல்டா பகுதியை சகாரா பாலைவனமாக்க அதிமுக அரசின் துணையோடு மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தையும் காவிரி டெல்டா விவசாயிகளும் - மக்களும் கடுமையாக தினமும் எதிர்த்துப் போராடி வருகிறார்கள்.

இந்நிலையில் சுற்றுச்சூழல் முன் அனுமதி பெற வேண்டிய எண்ணற்ற திட்டங்களை “மறுவகைப்படுத்தி” - அவற்றை எல்லாம் “சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லாத” பட்டியலில் சேர்த்து, “பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களை”ப் பலவீனப்படுத்தி, “மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவிற்கு மத்திய அரசே தலைவர் உறுப்பினர்களை நியமிக்க வழி செய்து” சுற்றுச்சூழலையும், விவசாயப் பெருமக்களின் வாழ்க்கையையும், சீரழிக்கும் திட்டங்களை ஊக்குவிக்கக் கொண்டு வரப்பட்டுள்ள மாநில உரிமைகளுக்கு விரோதமான - ஜனநாயக விரோத சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

நாடாளுமன்றம் கூடிய பிறகு - உரிய விவாதம் நடத்தி - துறை சார்ந்த நாடாளுமன்றத் தேர்வுக்குழுவில் ஆராய்ந்து - ஏற்கெனவே உள்ள “சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006”-ஐ மேலும் வலுப்படுத்தும் வகையிலும் - நாட்டில் உள்ள இயற்கை வளங்களுடன் இணைத்து மக்களின் ஆரோக்கியத்தையும், வாழ்க்கையையும் பாதுகாத்திடும் வகையிலும் மட்டுமே மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

மழலையர் கல்வியைக் கூட மத்திய அரசு முடிவு செய்வதா? - பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்த்திடுக

“புதிய கல்விக் கொள்கை 2019” குறித்து - தலைவர் ஸ்டாலின் ஜூலை 14 அன்று வல்லுநர்கள் குழு அமைத்து - அறிக்கை பெற்று - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரிடம் ஜூலை 7 அன்று அளித்து, “அரசியல் சட்டத்திற்கு எதிரான, மாணவர்களுக்கு எதிரான, மக்களுக்கு எதிரான 2019 வரைவு தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. அதை திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற அமர்வு இல்லாத - கரோனா பேரிடர் அனைத்து மாநிலங்களிலும் ஊடுருவி மக்களை வதைத்துவரும் இந்த நேரத்தில் - மக்கள் பிரதிநிதிகளின் விவாதத்திற்கே இடம் அளிக்காமல் - இக்கொள்கை குறித்து மத்திய அமைச்சரவை முடிவு எடுத்திருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது.

ஒட்டுமொத்தத் தமிழக மக்கள் கொண்டுள்ள எண்ணத்தின் எதிரொலியாக திமுக காட்டிய வலிமையான எதிர்ப்பினை அடுத்து, “இந்தி கட்டாயம் அல்ல” என்று புதிய கல்விக் கொள்கை - 2020-க்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ஆனால், “மும்மொழித் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற மத்திய அரசின் கல்விக் கொள்கை”, தமிழகத்தில் அண்ணாவால் அறிமுகம் செய்யப்பட்டு கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக நடைமுறையில் இருந்துவரும் இருமொழிக் கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது என்று தெரிவித்து, அந்த மும்மொழித் திட்டத்தை, திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற - மாநிலங்களவை - சட்டப் பேரவை உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் ஆணித்தரமாகவும், கடுமையாகவும் எதிர்த்து, நிராகரிக்கிறது.

கலைஞர் நிறைவேற்றிய, “1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ்மொழி கட்டாயப் பாடம்” என்ற “தமிழ் கற்பதற்கான சட்டம் 2006” அடிப்படையில் தற்போது 1 முதல் 5-ம் வகுப்பு வரை அகில இந்திய அளவில் தாய் மொழிக் கல்வி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது - கல்விக் கொள்கையில் - கல்வி முன்னேற்றத்தில் திமுகவின் தொலைநோக்குப் பார்வைக்கு கிடைத்த வெற்றி.

அதேநேரத்தில் சமஸ்கிருத மொழிக்கு மட்டும் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம், ஏனைய இந்திய மொழிகள் மீது கொண்டுள்ள மாற்றாந்தாய் மனப்பான்மையை உணர்த்துகிறது. ஆனால், ஊட்டச்சத்தையும், ஆரோக்கியத்தையும் இணைத்து வழங்கப்பட வேண்டிய மழலையர் பருவத்தில் முறைசார்ந்த கல்வி, 3,5,8-ம் வகுப்புகளுக்குத் தேர்வு, தமிழகத்தில் வெற்றிகரமாக இயங்கும் ‘பிளஸ் 2’ கல்விமுறையில் மாற்றம், தமிழகத்தில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட ‘குலக்கல்வி’த் திட்டத்தின் மறு வடிவமான தொழிற்கல்வி, இருக்கின்ற பள்ளிகளை மூட வழி வகுக்கும் பள்ளி வளாகங்கள், ஆசிரியர் தேர்வு, ஆசிரியர் பணி குறித்த தர நிர்ணயம் உள்ளிட்டவை, மாநிலங்களிடம் எஞ்சியிருக்கும் கல்வி உரிமையிலும் தேவையே இல்லாமல் தலையிட்டு - மத்திய அரசைத் தவிர மாநிலங்களுக்கு கல்விச் சீர்திருத்தம் பற்றி எதுவுமே தெரியாது என்று நினைப்பது மேலாதிக்கப் போக்காகும்.

மாணவச் சமுதாயத்திற்கு இளம் வயதிலேயே தலையில் தூக்கமுடியாத சுமையையும், மனதில் தாங்கவியலாத அழுத்தத்தையும் ஒருசேர ஏற்படுத்துவது - குழந்தைகளின் உரிமையை அப்பட்டமாக மீறும் அநியாயச் செயலாகும்.

உயர்கல்வியில், தன்னாட்சி உரிமை பெற்ற தமிழ்ச் செம்மொழி மத்திய நிறுவனத்தை பல்கலைக்கழகங்களுடன் இணைப்பது, மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதற்கு உயர் கல்வி ஆணையம் அமைப்பது, கலை மற்றும் அறிவியல் பட்டயப் படிப்புகளில் சேரவும் நுழைவுத் தேர்வு, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை அனுமதிப்பது, மாநிலங்களில் கற்றுக் கொடுக்க வேண்டிய பாடங்களை தேசிய அளவில் வகுப்பது ஆகியவை மாநிலங்களைப் புறக்கணித்து, கல்வியை மையப்படுத்தி வைக்கும் பின்னடைவாகும்.

“மழலைக் கல்வியைக் கூட மத்திய அரசு முடிவு செய்யும்” என்கிற இந்த தேசியக் கல்விக் கொள்கை; திமுக அளித்த பரிந்துரைகளுக்கு எதிராக இருக்கிறது. ஆகவே, பொதுப்பட்டியலில் உள்ள கல்வி, மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டு வரப்பட வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை இந்தக் கூட்டம் மீண்டும் வலியுறுத்துகிறது.

ஆகவே நாடாளுமன்றம் கூடி - கூட்டாட்சித் தத்துவம், சமூக நீதி, சமத்துவம் ஆகியவை குறித்து அனைத்து மாநிலக் கட்சிகளும் விவாதிக்கும் வரை - அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள “புதிய தேசியக் கொள்கை-2020”-ஐ நடைமுறைப்படுத்தக் கூடாது என்று திமுக கேட்டுக் கொள்கிறது.

மத்திய அமைச்சரவையால் ஜூலை 29 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள- “புதிய கல்விக் கொள்கை-2020”-ன் இறுதி வடிவத்தை உடனடியாக மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும். “தமிழ்நாட்டில் அண்ணாவின் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும். மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை” என்றும்; “சமூக நீதி, மாநில உரிமைகள் ஆகியவற்றைப் புறக்கணித்து, ஒருதலைப்பட்சமானதாக அமைந்துள்ள இந்த கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்” என்றும்; அதிமுக அரசு தீர்மானமாக உடனே அறிவித்திட வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது”.

இவ்வாறு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தவறவிடாதீர்!

Formal education in kindergartenExam3rd 5th 8th classesDMKResolutionAgainstNew education policyமழலையர் பருவத்தில் முறைசார்ந்த கல்வி358-ம் வகுப்புகளுக்குத் தேர்வுபுதிய கல்விக்கொள்கைஎதிர்த்து தீர்மானம்திமுக

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x