

தூத்துக்குடி மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலுவையிலுள்ள வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும் என, டிஎஸ்பிக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கண்டு பிடிக்காத திருட்டு, கொள்ளை மற்றும் கன்னக்களவு வழக்குகள் குறித்து அனைத்து டிஎஸ்பிகளுடன் எஸ்.பி ஜெயக்குமார் இன்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது: நீண்ட காலமாக கண்டு பிடிக்காத திருட்டு, கொள்ளை மற்றும் கன்னக்களவு வழக்குகளை தனிப்படைகள் அமைத்து விரைவாக கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் உள்ள பிரச்சினைகளை சுமூகமாக கையாள நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவுடித்தனம் மற்றும் கும்பல் ரவுடித்தனம் செய்பவர்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை, கடத்தல் போன்றவற்றை அடியோடு ஒழிக்க வேண்டும். பாலியல் வழக்குகள் குறித்து விசாரித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் காவல் துறையினரின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். காவல் நிலைய செயல்பாடுகள் சட்டத்துக்கு உட்பட்டே இருக்க வேண்டும்.
காவல் நிலையங்களின் செயல்பாடுகளை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என்றார் அவர். மேலும், மேலும் கைது நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை இயக்குநரின் சுற்றறிக்கை குறித்து டிஎஸ்பிக்களுக்கு எடுத்துக் கூறினார்.
கலந்தாய்வு கூட்டம்:
தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் ஒரு ஆண்டுக்கு மேலாக பணியாற்றும் 42 உதவி ஆய்வாளர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. எஸ்பி எஸ்.ஜெயக்குமார் தலைமை வகித்தார். ஏடிஎஸ்பிக்கள் செல்வன், கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி ஆய்வாளர்களுக்கு அவர்கள் விரும்பிய காவல் நிலையங்களுக்கே பணி மாறுதல் வழங்கப்பட்டன. அப்போது அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை எஸ்பி வழங்கினார். கூட்டங்களில் டிஎஸ்பிக்கள் கணேஷ், சுரேஷ், பாரத், நாகராஜன், கலைக்கதிரவன், சங்கர், பழனிக்குமார், பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.