

சிவகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது 2 ஊழியர்களுக்கு கரோனா உறுதியென தகவல் வந்தது. இதனால் கூட்டம் ரத்து செய்யப்பட்டு அலுவலகம் அவசர அவசரமாக மூடப்பட்டது.
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கோகிலா தலைமையில் வருவாய்த் தீர்வாய கணக்குகள் சரிபார்க்கப்பட்டன.
இன்று ஜமாபந்தி கூட்டம் நடைபெற்றுக்கொண்டு இருந்தபோது, ஏற்கெனவே பரிசோதனை செய்த வருவாய் ஆய்வாளர்கள் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத் துறையினரிடம் இருந்து தகவல் வந்தது.
இதனால், கூட்டத்தில் பங்கேற்ற வருவாய்த் துறையினர் பதற்றம் அடைந்தனர். கூட்டத்தில் பங்கேற்ற வருவாய்த் துறை ஊழியர்கள் உடனடியாக வீட்டுக்கு திரும்பிச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து ஜமாபந்தி கூட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது. கரோனா தொற்று கண்டறியப்பட்ட வருவாய் ஆய்வாளர்கள் 2 பேரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சிவகிரி வட்டாட்சியர் அலுவலகம் கிருமிநாசினி தெளித்து மூடப்பட்டது. 2 நாட்கள் சிவகிரி பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து ஜமாபந்தி கூட்டம் நடைபெறும் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரோனா அறிகுறி காரணமாக பரிசோதனை செய்தவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தி இருக்காமல் அலுவலகத்துக்குச் சென்று வழக்கம்போல் பணியில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஜமாபந்தி நடைபெற்றதால் பணிகள் அதிகமாக இருந்ததாகவும், அதனால் அலுவலகத்துக்குச் சென்று பணியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. கரோனா தொற்று கண்டறியப்பட்ட வருவாய் ஆய்வாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.