

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே குருவிகளுக்காக இருளில் வாழ்ந்த கிராமமக்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார். மேலும் திமுக சார்பில் நிதியுதவியும் அளிக்கப்பட்டது.
காளையார்கோவில் அருகே பொத்தகுடியில் மின்கம்பத்தில் கூடு கட்டி, முட்டையிட்டு அடைகாத்த வண்ணாத்தி குருவிக்காக கிராமமக்கள் 45 நாட்களாக தெருவிளக்குகளை எரியவிடாமல் இருளில் வாழ்ந்தனர்.
கிராமமக்களின் இச்செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வந்தனர்.
இதை அறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அக்கிராமமக்களை ட்விட்டரில் பாராட்டினார். மேலும் அக்கிராமத்தின் வளர்ச்சிக்காக திமுக சார்பில் ரூ.50,001 நிதியுதவி அளிக்க மாவட்ட செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பனுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையிலான திமுகவினர் பொத்தகுடியில் குருவியை பாதுகாக்க முன் எடுத்த இளைஞர் கருப்புராஜா மற்றும் கிராமமக்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தனர்.
மு.க.ஸ்டாலினும் கருப்புராஜாவிடம் மொபைலில் தொடர்பு கொண்டு பாராட்டினார்.
தொடர்ந்து கிராமத்திற்கு நிதியுதவியும் அளிக்கப்பட்டது. மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், ஒன்றியச் செயலாளர் கென்னடி, நகரச் செயலாளர் துரைஆனந்த், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.