Published : 30 Jul 2020 05:45 PM
Last Updated : 30 Jul 2020 05:45 PM

புதிய கல்விக் கொள்கை; கடுகளவு கூட நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் நடைமுறைப்படுத்துவதா?- கே.எஸ். அழகிரி கண்டனம் 

சென்னை

புதிய கல்விக் கொள்கையை உடனடியாக நிறைவேற்றாமல் நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடத்துவதோடு, அனைத்து மாநில அரசுகளோடு கலந்து பேசி நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“இந்தியாவில் உள்ள ஏழை, எளிய மக்களிடையே மதம், சாதியின் காரணமாக கல்வியிலும், சமூக வாழ்க்கை முறையிலும் ஏற்றத்தாழ்வுகள் நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகின்றன. அதனால் அவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டு வருகிறது.

சுதந்திர இந்தியாவில் அனைவருக்கும் கல்வி கொடுக்க வேண்டுமென்று அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டு, அதை நடைமுறையில் கொண்டு வருவதற்கு பல கல்விக் கொள்கைகள் உருவாக்கப்பட்டன.

மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 6 முதல் 14 வயது உள்ள அனைவருக்கும் கல்வி பெறுகிற உரிமை சட்டமாக நிறைவேற்றப்பட்டது. நகர்ப்புறங்களில் கிடைக்கிற தரமான கல்வி கிராமப்புறங்களில் கிடைக்கவில்லை. கல்வி வணிகமயமாகிவிட்ட நிலையில் தரமான கல்வி ஏழை, எளியவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் கிடைக்கவில்லை.

அரசுப் பள்ளிகள் மூலமாகத்தான் அனைவருக்கும் தரமான கல்வி வழங்க வேண்டும். அதை வழங்குவதற்கு புதிய கல்விக் கொள்கையில் எந்தவிதமான வாய்ப்பும் இல்லை. அதேபோல, உயர் கல்வியில் அனைத்து விதமான பட்டப் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே நீட் தேர்வு காரணமாக தமிழக கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவக் கல்வி பெற முடியாமல் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதே நிலைதான் உயர் கல்வித்துறையிலும் நுழைவுத் தேர்வு வைத்தால் ஏற்படப் போகிறது.

நெடுங்காலமாக நடைமுறையில் இருந்து வந்த கல்விக் கொள்கைகளுக்கு முற்றிலும் புறம்பாக வகுப்புவாத கொள்கைகளைப் புகுத்தி மதச்சார்பற்ற கொள்கைக்கு உலை வைக்கும் நோக்கத்துடன் புதிய கல்விக் கொள்கையை பாஜக அரசு நிறைவேற்றியிருக்கிறது.

இந்தக் கொள்கைக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள முற்போக்குச் சிந்தனை கொண்ட அறிஞர் பெருமக்கள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தும், அதைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.

தொடக்கத்தில் மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியைக் கட்டாயப் பாடமாக திணிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எதிர்ப்பு கண்டு அஞ்சிய மத்திய அரசு, மூன்றாவது மொழி என்ன என்பதை மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் எனக் கொள்கையை மாற்றிக் கொண்டு பின்வாங்கியது.

மும்மொழிக் கொள்கையின்படி சமஸ்கிருதம் அனைத்துப் பள்ளி மற்றும் உயர் படிப்புகளில் விருப்பப் பாடமாக சேர்க்கப்பட்டு ஊக்குவிக்கப்பட இருக்கிறது. மற்ற செம்மொழிகளும் இந்திய இலக்கியங்களும் விருப்பப் பாடங்களாக சேர்க்கப்பட்டுள்ளன. இதில் மத்திய அரசின் பாரபட்சம் வெளிப்படுகிறது. இதன்மூலம் பல்வேறு மாநிலங்களிடையே நிலவும் பன்முகக் கலாச்சாரம் சிதையப் போகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் மூன்றாவது மொழி சமஸ்கிருத மொழியா? இந்தி மொழியா? அல்லது வேறு மொழியா என்பதை முடிவு செய்ய வேண்டிய இடத்தில் தமிழக அரசு உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை கொண்டு பன்முகக் கலாச்சாரத்தை போற்றி வருகிற இந்திய நாட்டில் ‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்” என்ற கொள்கையின் அடிப்படையில் இந்தி, சமஸ்கிருத மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் மக்களிடையே பிளவு மனப்பான்மைதான் வளரும்.

சமீபத்தில் மத்திய - மாநில பாஜக அரசுகள் பாடத்திட்டங்களில் இருந்து மதச்சார்பின்மை, அரசமைப்புச் சட்டம், குடிமக்கள் உரிமைகள் மற்றும் விடுதலைப் போராட்ட மாவீரர்களான திப்பு சுல்தான் போன்றவர்களின் வரலாற்றுப் பாடங்களை நீக்குகிற முடிவையும் எடுத்திருக்கிறது. இந்தப் பின்னணியில் பார்க்கிறபோது, புதிய கல்விக் கொள்கையை காவி மயமாக்கும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் கடுகளவு விவாதம் கூட நடத்தப்படவில்லை. வருகிற ஆகஸ்ட் மாதத்தில் நாடாளுமன்றம் கூடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்போது இதுகுறித்து விரிவாக விவாதித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்தை அறிந்து பாஜக அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால், அவசரச் சட்டத்தின் மூலம் ஆட்சி நடத்துகின்ற நரேந்திர மோடி அரசு புதிய கல்விக் கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயாராக இல்லை.

எனவே, கல்வி பெறுவதில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைப் போக்காமல், வகுப்புவாதக் கொள்கைகளைப் புகுத்தாமல் அரசியலமைப்புச் சட்டப்படி மக்களுக்கு இருக்கிற உரிமைகளைப் போற்றிடும் வகையில் புதிய கல்விக் கொள்கை இல்லை. இந்தக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டால் 136 கோடி மக்களும் மதரீதியாகப் பிளவுபடுத்துகிற வகையில் கல்வி முறை புகுத்தப்பட்டு காவிமயமாவதற்கு அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன.

மக்கள் விரோத புதிய கல்விக் கொள்கையை உடனடியாக நிறைவேற்றாமல் நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடத்துவதோடு, அனைத்து மாநில அரசுகளோடு கலந்து பேசி நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x