Last Updated : 30 Jul, 2020 05:50 PM

 

Published : 30 Jul 2020 05:50 PM
Last Updated : 30 Jul 2020 05:50 PM

தாய்ப்பால் மூலம் கரோனா கிருமி பரவாது; ஜிப்மர் பச்சிளங் குழந்தைகள் நலத்துறை தலைவர் தகவல்

பிரதிநிதித்துவப் படம்

புதுச்சேரி

தாய்ப்பால் மூலம் கரோனா பரவாது என்று ஜிப்மர் பச்சிளங் குழந்தைகள் நலத்துறை தலைவர் ஆதிசிவம் தெரிவித்தார்.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரம் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு வாரமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தாய்ப்பால் விழிப்புணர்வு வாரத்தில் 'ஆரோக்கியமான உலகுக்குத் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்போம்' என்பதே மையக்கருத்து.

இது தொடர்பாக ஜிப்மர் பச்சிளங் குழந்தைகள் நலத்துறை தலைவர் ஆதிசிவம் கூறியதாவது:

"தாய்ப்பால் குடித்து வரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியும், மூளை வளர்ச்சியும் நன்றாக இருக்கும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, நெஞ்சில் சளி, காதில் சீழ் போன்ற பொதுவான நோய்த்தொற்றுகள் ஏற்படாது.

பச்சிளங் குழந்தைகளுக்கு மாட்டுப்பால், கிரைப் வாட்டர், பால் பவுடர் போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடாது. தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும், சேய்க்கும் இடையே பாசப்பிணைப்பு நன்றாக இருக்கும். தாய்ப்பால் கொடுக்கும் அன்னைக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படும்.

கரோனா காலத்திலும் பச்சிளங் குழந்தைக்கு ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும். தாய்ப்பால் மூலம் கரோனா பரவாது. அக்கிருமியை எதிர்க்கும் சக்கி தாய்ப்பால் மூலம் குழந்தைக்குக் கிடைக்கும். கரோனா பாதிப்பு தாய்க்கு இருந்தாலும் தாயையும், சேயையும் பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

கரோனா காலத்தில் தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்னர், தங்கள் கைகளைச் சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் அன்னையர் முகக்கவசம் அணிய வேண்டும். அவர்கள் வழக்கம்போல் தாய்ப்பால் தரலாம்.

ஜிப்மரில் 'அமுதம் தாய்ப்பால் மையம்' உள்ளது. பாலூட்டும் அன்னையர் அனைவரும் தாய்ப்பால் தானம் தரலாம். தங்கள் குழந்தைகளுக்குக் கொடுத்தது போக எஞ்சிய தாய்ப்பாலை வங்கிக்குத் தானம் தருவதால் அன்னைக்கு எப்பிரச்சினையும் ஏற்படாது. மாறாக அவர்களுக்குப் பால் சுரப்பது அதிகரிக்கும்.

குறிப்பாக, தாயை இழந்த குழந்தைகளும், தாயிடமிருந்து தற்காலிகமாகப் பால் கிடைக்காத குழந்தைகளும் இதனால் பயன் அடைவார்கள்.

தானம் பெறப்பட்ட தாய்ப்பாலை நன்கு கொதிக்க வைத்துப் பதப்படுத்துவதால் அதிக கிருமிகள் இருக்க வாய்ப்பில்லை. சுத்திகரிக்கப்பட்ட தாய்ப்பால் பரிசோதிக்கப்பட்ட பின்னரே குழந்தைக்குத் தரப்படும்.

தாய்ப்பால் கொடுப்பதும், பெறுவதும் அவரவர் சொந்த விருப்பமேயாகும். இதில் பணப் பரிமாற்றம் ஏதும் கிடையாது"

இவ்வாறு ஆதிசிவம் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x