

சிவகங்கை மாவட்டத்தில் விவசாய மேம்பாட்டிற்காக தோண்டிய 107 சமுதாயக் கிணறுகள் மாயமாகியுள்ளன. ஐந்து ஆண்டுகளாக விவசாயிகள் குழுக்கள் அமைக்காததால் சிக்கல் நீடிக்கிறது.
தமிழகம் முழுவதும் வேளாண்மை பொறியியல் சார்பில் சிறு, குறு விவசாயிகளுக்காக 1982-ல் சமுதாய கிணறுகள் தோண்டப்பட்டன. பம்புசெட் மோட்டார், இலவச மின்சார வசதி ஏற்படுத்தி தரப்பட்டன.
ஒரு கிணறு மூலம் 20 முதல் 30 ஏக்கர் வரை பாசன வசதி பெற்றன. அவற்றை பாதுகாக்க சிறு, குறு விவசாயிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டன. அவை முன்னுரிமை அடிப்படையில் விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சி வந்தன.
பல ஆண்டுகளாக விவசாய குழுவிற்கான தேர்தலை நடத்தவில்லை. இதனால் சிலர் சமுதாய கிணறுகளை தங்கள் சொந்த காட்டுப்பாட்டில் வைத்து கொண்டனர். அவற்றை மீட்க வேண்டுமென, சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தினர்.
இதையடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, சமுதாய கிணறுகள் குறித்து அந்தந்த ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் சிவகங்கை மாவட்டத்தில் தோண்டப்பட்ட 354 கிணறுகளில் 247 மட்டுமே நல்ல நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. அதில் பல கிணறுகள் தனியார் கட்டுப்பாட்டில் உள்ளன.
மேலும் மாயமான 107 கிணறுகளில் 67 கிணறுகள் துார்ந்துபோகி தண்ணீர் இல்லாமலும், 40 கிணறுகள் இருந்த சுவடே தெரியாமல் மறைந்ததும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து விவசாயிகள் குழுக்கள் அமைத்து சமுதாய கிணறுகள் மீட்க வேண்டுமென வேளாண்மை, ஊரகவளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு அப்போதைய மாவட்ட ஆட்சியர் ராஜாராமன் உத்தரவிட்டார். ஆனால் 5 ஆண்டுகளாக விவசாயிகள் குழுக்கள் அமைக்காததால் கிணறுகள் மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது.
இதுகுறித்து சிவகங்கை விவசாயிகள் பிரதிநிதி கண்ணன் கூறியதாவது: விவசாயிகள் குழுக்கள் அமைக்க அதிகாரிகள் தாமதப்படுத்துகின்றனர்.
அதற்குமுன்பாக பயன்பாட்டில் உள்ள கிணறுகளையாவது தனியாரிடம் இருந்து மீட்க வேண்டும். கிணறுகளை அனைவரும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
இதுகுறித்து ஊரகவளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்த கிணறுகளை காலப்போக்கில் கண்டுகொள்ளாமல் விடப்பட்டதால் சிலர் சொந்தமாக்கி கொண்டனர். இதனால் மற்றவர்கள் விவசாயத்தை கைவிட்டனர்.
பல இடங்களில் விவசாயமே இல்லாததால் மீண்டும் கிணறுகளை சீரமைக்க முடியாதநிலை உள்ளது. மேலும் அதற்கான திட்டமும் தற்போது நடைமுறையில் இல்லை,’ என்றார்.