Published : 30 Jul 2020 05:06 PM
Last Updated : 30 Jul 2020 05:06 PM

புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு; ராகுலிடம் மன்னிப்பு; பாஜகவுக்குச் செல்லவில்லை: குஷ்பு விளக்கம்

சென்னை

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தது குறித்து தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார் குஷ்பு.

நாட்டின் புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து நேற்று (ஜூலை 29) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உயர் கல்வித்துறை செயலர் அமித் கரே அதன் முக்கிய அம்சங்களை பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. ஆனால், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் ஆதரவு தெரிவித்தார்.

எதிர்க்கட்சியில் இருக்கும் குஷ்பு, புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தது சமூக வலைதளத்தில் சலசலப்பை உண்டாக்கியது. மேலும், பலரும் அவர் பாஜகவில் இணையவுள்ளார் என்றும் கருத்து தெரிவித்தார்கள்.

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தது தொடர்பாக குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் அளித்துள்ள விளக்கம்:

"ரிலாக்ஸ் ப்ளீஸ், உடனே மகிழ்ச்சியாட்டம் வேண்டாம். நான் பாஜகவுக்குச் செல்லவில்லை. என் கட்சியின் கருத்துக்கு மாற்றுக் கருத்து என்னிடம் இருக்கலாம். ஏனெனில் நான் ஒரு தனிநபர் எனக்கான தனித்த சிந்தனை உள்ளது. ஆம்! புதியக் கல்விக் கொள்கை சில இடங்களில் தவறாகவே உள்ளது. ஆனாலும் இந்த மாற்றத்தை நேர்மறையாகப் பார்க்க முடியும் என்பதாகவே நான் உணர்கிறேன்.

இதன் நேர்மறை அம்சங்களைப் பார்க்கவே விரும்புகிறேன், எதிர்மறை அம்சங்களை மெதுவே படித்துப் பார்த்து பிறகு அறுதியிடுவோம். நாம் பிரச்சினைகளுக்குத் தீர்வு அளிக்க வேண்டுமே தவிர வெறுமனே குரல்களை எழுப்பிப் பயனில்லை. எதிர்க்கட்சி என்பதும் கூட நாட்டின் எதிர்காலத்துக்கு உழைப்பவர்கள் தாம். அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன். ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்தும் கற்றுக் கொள்கிறேன்.

அரசியல் என்பது சத்தம் எழுப்புவது மட்டுமல்ல, அது இணைந்து பணியாற்றுவதுமாகும். பாஜகவும், பிரதமரும் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகளாக நாங்கள் புதியக் கல்விக் கொள்கையை விரிவாக ஆராய்ந்து தவறுகளைச் சுட்டிக்காட்டுவோம். இந்திய அரசு இது தொடர்பாக அனைவரையும் நம்பிக்கையுடன் பார்த்து தவறுகளைச் சரி செய்ய வேண்டும்.

புதிய கல்விக் கொள்கை 2020 குறித்து என்னுடைய நிலைப்பாடு என் கட்சியின் நிலைப்பாட்டிலிருந்து வேறுபட்டதுதான். இதற்காக ராகுல் காந்தியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஆனால், நான் தலையாட்டும் பொம்மையாக, ரோபோவாக இல்லாமல் உண்மையைப் பேசுகிறேன். அனைத்தும் தலைவரின் கருத்துக்கு உடன்படுவதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒருவர் வேறு, மாற்றுக் கருத்துகளையும் கொண்டிருக்கலாமே.

நான் ஜனநாயகத்தை மிகவும் நம்புகிறேன். கருத்து மாறுபாடுகள், மாறுபட்ட கருத்துக்கள் இருப்பது நல்லதுதான். என் நாடு அனைத்து விதமான மக்களாலும் உருவாக்கப்பட்டதுதான், அனைத்து மத நம்பிக்கைகள், மத நம்பிக்கையில்லாதவர்கள், அனைத்துக் கட்சிகள், இட ஒதுக்கீட்டினால் பிரிக்கப்பட்ட அனைவரும் சேர்ந்துதான் இந்த நாட்டை உருவாக்கியுள்ளனர்."

இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x