

மதுரை அரசு ராஜாஜி மருத்துமவனையில் கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையில் குறை இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு டீன் சங்குமணி விளக்கமளித்துள்ளார்.
"மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நோயாளிகளைக் காப்பாற்ற தினமும் மருத்துவர்கள் கண்ணுக்குத் தெரியாத கரோனா கிருமிகளுடன் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டிருக்கிறோம்" என்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் சங்குமணி தெரிவித்தார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை வழங்கப்படுவதில்லை என்றும், தேவைப்படும் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்படுவதில்லை என்றும் சர்ச்சையும் குற்றச்சாட்டும் எழுந்தது.
சமீபத்தில் சிகிச்சையில் இருந்த ஒரு மருத்துவர், இறக்கும் தருவாயில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சரியாக சிகிச்சை வழங்கப்படவில்லை, நான் இறந்து போய்விடுவேன் என்று அவர் கூறியதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படும் நிலையில்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் சங்குமணி அந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 311 பேருக்கு கரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 28-ம் தேதி மட்டும் 4,800 பரிசோதனைகள் செய்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சாதனை செய்துள்ளது. அரசு ராஜாஜி மருத்துவமனையில் 6 பி.சி.ஆர் கருவிகளும், 770 ஆக்சிசன் கூடிய படுக்கைகள் உள்ளது.
கரோனா உறுதி செய்யப்பட்டால் நோயாளிகளுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலமாக அந்தத் தகவல் அனுப்பப்படுகிறது. அதுபோல், இன்று சணிக்கிழமை முதல் கரோனா முடிவுகள் குறித்த சான்றிதழை மருத்துவமனை வெப்சைட்டில் டவுண்லோபுடு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்படுகிறது.
6 பேரிடம் ப்ளாஸ்மா தானம் வாங்கி 5 நோயாளிகளுக்கு ப்ளாஸ்மா சிகிச்சை வழங்கி அவர்களை முழுமையாகக் குணமடையச் செய்துள்ளோம்.
ப்ளாஸ்மா வங்கி வேண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். கரோனா நோயாளிகளுடன் இருக்கும் உதவியாளர்களுக்கு உதவ தனிக்குழு அமைத்துள்ளோம். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உதவியாளர்கள் வெளியில் செல்லக் கூடாது.
மதுரை அரசு மருத்துவமனையில் தொற்று நோய் சிகிச்சைகளில் 30 ஆண்டு அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் மூலமாக கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.
அதனாலேயே, தமிழகத்திலே அதிகமான நோயாளிகள் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்து இந்த தொற்று நோயிலிருந்து மீண்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
தீவிர நோயாளிகளுக்கு மட்டுமில்லாது தேவைப்படும் ஆரம்பநிலை நோயாளிகளுக்கும் ஆக்சிஜன் கொடுத்து சிகிச்சை வழங்கிவருகிறோம்.
மனசாட்சிக்கு விரோதமின்றி பாரபட்சமின்றி கரோனாவிற்கு எதிராகப் போராடி நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்றிவருகிறோம். உயிரிழந்தவர்களை கடவுளுக்கு சமமானவர்களாக மதித்து உடல்களை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துவருகிறோம்.
நோயாளிகளைப் பராமரிக்க அதிக அளவிற்கான செவிலியர்களை பணி நியமனம் செய்துள்ளோம். உணவும் ஒரு வகையில் மருந்து என்பதால் கரோனா நோயாளிகளுக்கு ஆரோக்கியான உணவுகள் வழங்கப்படுகிறது.
நோயாளிகளைக் காப்பாற்ற கண்ணுக்குத் தெரியாத கிருமிகளுடன் மருத்துவர்களாகிய நாங்கள் உயிரைப் பணயம் வைத்து போரோடிவருகிறோம்.
பாரபட்சமின்றி செவிலியர்களுக்கு, மருத்துவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்கிறோம். இதனைக் கண்காணிக்க மருத்துவர் குழுவை நியமித்துள்ளோம். கரோனா வார்டில் பணிபுரிந்த 8 பேருக்கு இதுவரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மருத்துவர் ஆடியோ முற்றிலும் தவறானது:
டீன் சங்குமணி மற்றும் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனை கண்காணிப்பு குழு உறுப்பினர் மருத்துவர் நடராஜன் ஆகியோர் கூறுகையில், "மருத்துவர் சாந்திலாலுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிறந்த சிகிச்சை வழங்கப்பட்டது. சாந்திலால் 12 ஆம் தேதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் தனியார் மருத்துவமனையில் 4 நாட்கள் சிகிச்சைபெற்ற நிலையில் ஆக்சிஜன் குறைந்த நிலையில் மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவருக்கு ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 2 ஊசி மருந்துகள் செலுத்தபட்டது. அவருக்கு ஆக்சிஜன் இயந்திரம் செலுத்திய போது அதனை கழற்றிவிட்டார். சிகிச்சைக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
71 வயதுடைய அவரை கண்காணிக்க ஆள் இல்லாத நிலையில் செவிலியர்களே கவனித்துக் கொண்டனர். அவர் சர்க்கரை வியாதி உள்ளிட்ட இணை நோய்கள் இருந்தது. சிறப்பான சிகிச்சை அளித்த நிலையில் மருத்துவர் வெளியிட்ட ஆடியோ எங்களை மனவருத்தம் ஏற்படுத்திவிட்டது. மருத்துவருக்கு அளித்த சிறப்பான சிகிச்சை தொடர்பாக ஆதாரம் உள்ளது, ’’ என்றார்.