புதிய கல்விக் கொள்கை: இளைஞர்கள் பயன்பெறுவார்கள்; 9 சிறப்பு அம்சங்களை பட்டியலிட்ட ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

புதிய கல்விக் கொள்கையின் நல்ல அம்சங்களால் வருங்கால இளைஞர்கள் பயன்பெறுவார்கள் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஜூலை 30) வெளியிட்ட அறிக்கை:

"ஆழ்ந்த ஆய்வு, பரந்த கலந்துரையாடல், கல்வியாளர்களின் கருத்து அறிதலுக்குப் பின் புதிய தேசிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட கொள்கையில் பல சிறப்பு அம்சங்கள் அடங்கியுள்ளன.

குறிப்பாக,

- 3 முதல் 5 வயது வரை மழலையர் கல்வி வழங்குதல்

- பிளஸ் 2 வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி

- 2030 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி வழங்கும் லட்சியம்

- நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி) 6 சதவிகிதம் நிதி கல்விக்கு ஒதுக்கீடு

- அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தேசம் முழுவதும் சமச்சீர் கல்வியை அமல் செய்தல்

- உயர் கல்வியை முறைப்படுத்த ஒரே ஒழுங்காற்று ஆணையம், மும்மொழிக் கொள்கை அறிமுகம், இதனை செயல்படுத்தும் உரிமையை மாநிலங்களுக்கு வழங்கியிருக்கும் சிறப்பு அம்சம்

- பிரதமரைத் தலைவராக கொண்ட தேசிய கல்விக்குழு அமைத்தல்

- 34 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்பு அறிவிக்கப்பட்டுள்ள கல்வி கொள்கை

- புதிய நவீன இந்தியாவை அறிவாற்றல் மிக்க இளைஞர் சமுதாயத்தை உருவாக்கும் லட்சியத்தோடு வெளியிடப்பட்டுள்ள கல்வி கொள்கை

நல்ல அம்சங்களை கொண்ட இக்கல்வி கொள்கையால் வருங்கால இளைஞர்கள் பயன்பெறுவார்கள் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக குறிப்பிட விரும்புகிறேன்"

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in