

கரோனா ஊரடங்கால் ஆம்னி பேருந்து தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை நம்பியுள்ள 2 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என தனியார் ஆம்னி பேருந்து நிர்வாகி அன்பழகன் வேதனை தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு தளர்வுகளுடன் ஆகஸ்டு 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுபோக்குவரத்துக்கு தடை நீடிக்கப்பட்ட நிலையில் ஆம்னி பேருந்து தொழில் கடந்த 4 மாதங்களாக இயக்கம் இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் ஆம்னி பேருந்து தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தங்கள் தரப்பு வேதனையை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகி தெரிவித்துள்ளார். தனியார் ஆம்னி பேருந்து சங்க நிர்வாகி அன்பழகன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி:
அரசு பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் ஊரடங்கை அறிவித்துள்ளார்கள். ஊரடங்கினால் தொழிற்சார்ந்துள்ளவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களுக்கு அரசு கடன் தவணை நீட்டிப்புத்தான் அளித்துள்ளது. ஆனால் வட்டியிலிருந்து விடுதலை இல்லை.
ஆம்னி பேருந்து சார்ந்து 2 லட்சம் குடும்பங்கள் உள்ளன. டிரைவர், கிளினர், மெக்கானிக், அலுவலக பணியாளர்கள் என லட்சக்கணக்கானவர்கள் நான்கு மாதங்களாக வேலையின்றி வாடி வருகின்றனர்.
அவர்கள் பராமரிப்புக்கு ஒரு நிறுவனத்துக்கு வாரம் 2 லட்சம் வேண்டும். ஆம்னி பேருந்து சார்ந்த தொழிலாளர்கள் சார்பாக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எங்களுக்கான எந்த நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை. இயக்காத பேருந்துக்கு சாலை வரி கட்டச் சொல்கிறார்கள். இது நியாயமா தெரியவில்லை. நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். மிகவும் வருத்தமான சூழ்நிலையில் உள்ளோம்.
அரசு உரிய முடிவெடுத்தால் நன்மையாக இருக்கும்.