ஊரடங்கில் விதிக்கப்பட்டுள்ள தடைகள்: படிப்படியாக எவை எவைக்குத் தளர்வு?- முதல்வர் பழனிசாமி விளக்கம்

ஊரடங்கில் விதிக்கப்பட்டுள்ள தடைகள்: படிப்படியாக எவை எவைக்குத் தளர்வு?- முதல்வர் பழனிசாமி விளக்கம்
Updated on
1 min read

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் முக்கியமான செயல்பாடுகளுக்குத் தடை இருந்தாலும் சில செயல்பாடுகளுக்கு அவ்வப்போது தளர்வு அறிவிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“ தமிழகத்தில் ஆகஸ்டு 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.

* மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பெரிய வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு.

* அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.

* நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்லத் தடை தொடரும்.

* தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை தொடரும். எனினும், மருத்துவத் துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் வெளி மாநிலத்தவர்களை தனிமைப்படுத்துவதற்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.

* வணிக வளாகங்கள் (ஷாப்பிங் மால்கள்).

* பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்குவிக்கலாம்.

* மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.

தொற்றின் தன்மைக்கேற்ப தளர்வுகள் அறிவிக்கப்படும் செயல்பாடுகள்:

* மெட்ரோ ரயில் / மின்சார ரயில்.

* திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் (பார்கள்), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள்.

* அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.

* மாநிலங்களுக்குள் உள்ள பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து.

மேற்கண்ட கட்டுப்பாடுகளில், தொற்றின் தன்மைக்கேற்றவாறு, படிப்படியாகத் தளர்வுகள் அளிக்கப்படும்“.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in