அண்ணா சிலை மீது காவித்துணி: தனித்தன்மை ஏதும் இல்லாததால் மறைந்த மாமேதைகள் மீது வன்மம் காட்டுகிறார்கள்; தலைவர்கள் கண்டனம்

அண்ணா சிலை மீது காவித்துணி
அண்ணா சிலை மீது காவித்துணி
Updated on
2 min read

அண்ணா சிலை அவமதிக்கப்பட்டதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பு அருகே அண்ணா சிலை உள்ளது. இந்த சிலை உள்ள பீடத்தின் மீது நள்ளிரவில் யாரோ காவித் துணியைப் போட்டுச் சென்றுள்ளனர். மேலும், அருகே குப்பைகளும் கொட்டப்பட்டிருந்தன.

இதையறிந்த குழித்துறை காவல்துறையினர் இன்று (ஜூலை 30) அதிகாலையில், அங்கு சென்று காவித் துணியை அப்புறப்படுத்தினர்.

இது தொடர்பாக, விசாரணை நடைபெறுவதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இச்சம்பவத்திற்குத் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம், தமிழக துணை முதல்வர்

அண்ணாவின் சிலையை மர்ம நபர்கள் அவமதிப்புச் செய்தும் பீடத்தில் காவிக் கொடியும் கட்டிச் சென்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். பொது வாழ்வில் ஈடுபட்ட மற்றும் சமூகத்திற்காக பாடுபட்ட தலைவர்களை அவமதிக்கும் வகையில், அவர்களின் சிலைகளைக் களங்கப்படுத்துவது, சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக ஒற்றுமையைச் சீர்குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் விஷமிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கையை விரைவில் எடுக்கும்.

மு.க.ஸ்டாலின், தலைவர், திமுக

அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டியிருக்கிறார்கள். தொடர்ந்து செய்யும் தரம் தாழ்ந்த செயல்களால் தரைமட்டத்துக்கும் கீழே போகும் அவர்களின் எண்ணம்! தங்களுக்கு அடையாளம் காட்டிக்கொள்ள தனித்தன்மை ஏதும் இல்லாததால் மறைந்த மாமேதைகள் மீது வன்மம் காட்டுகிறார்கள்! குற்றவாளிகளைக் கைது செய்க!

வைகோ, பொதுச் செயலாளர், மதிமுக

அண்ணா சிலைக்குக் காவித் துணி கட்டி களங்கப்படுத்தியுள்ளனர் சில அயோக்கியர்கள்.

தமிழகத்தில் திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர் சிலைகளை அவமதித்து வந்த சாதி, மதவெறி பாசிசவாதிகள் தற்போது அண்ணாவின் சிலையையும் அவமதித்துள்ளனர். இது தமிழ் அன்னையையே களங்கப்படுத்திய செயலாகும். இத்தகைய தீய போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது.

இத்தகைய செயல்கள் மூலம் மக்கள் கவனத்தைத் திசை திருப்பி, நாசகாரத் திட்டங்களைத் திணிக்கும் முயற்சியில் சில அக்கறையுள்ள சக்திகள் முனைப்பாக உள்ளன.

மேலும் மேலும் இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களை உடனடியாகக் கைது செய்து கூண்டில் ஏற்றி, தக்க தண்டனை வழங்க வேண்டும்.

மறைந்த தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் செயல்களுக்கு தமிழக அரசு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

ராமதாஸ், நிறுவனர், பாமக

அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டப்பட்டிருக்கிறது. இத்தகைய வெறுப்பரசியல் கண்டிக்கத்தக்கது. இது தலைவர்களை இழிவுபடுத்தும் செயலாகும். இந்த இழிசெயலை செய்தவர்களுக்கு இதனால் என்ன பயன் கிடைக்கப் போகிறது?

கொள்கைகளை கொள்கைகளால் எதிர்கொள்ள வேண்டும். மாற்று நிறக் கொடிகளைப் போர்த்துவதன் மூலம் அண்ணாவின் கொள்கைகளை மாற்றிவிட முடியாது. இத்தகைய இழிசெயலைச் செய்தவர்கள், அதற்கு தூண்டுதலாக இருந்தவர்கள் அனைவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்!

டிடிவி தினகரன், பொதுச் செயலாளர், அமமுக

பெரியார், எம்.ஜி.ஆர் சிலைகளைத் தொடர்ந்து கன்னியாகுமாரி மாவட்டத்தில் அண்ணாவின் சிலையும் காவிக்கொடியால் அவமதிக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

இத்தகைய நச்சு செயலில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையே தொடரும் சிலை அவமதிப்புச் சம்பவங்கள் காட்டுகின்றன. இல்லாவிட்டால் மறைந்த தலைவர்களை இழிவுபடுத்துவதற்கு இவ்வளவு துணிச்சல் இந்த விஷமிகளுக்கு எங்கிருந்து வரும்?

சமூக அமைதியைச் சீர்குலைக்கும் இத்தகைய செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆட்சியாளர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

அண்ணா சிலையில் காவிக் கொடியை ஏற்றியுள்ள கீழ்த்தர செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அதற்கு முன் கோவை சுந்தராபுரத்தில் பெரியார் சிலைக்குக் காவி சாயம் பூச்சு. அதற்கு சில மாதங்களுக்கு முன் தஞ்சையில் வள்ளுவர் சிலைக்குக் காவிச் சாயம் போன்ற வேலையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்டம் பாய்ந்து நடவடிக்கை எடுத்திருந்தால், இப்படிப்பட்ட அருவருப்பான அரசியல், தொடருமா? அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை அமளிக்காடாக மதக் கலவர பூமியாக்கிடும் முயற்சிகள்தான்.

இப்படிப்பட்டவர்கள் மீது மென்மையான ஒருதலைப்பட்ச முந்தைய நடவடிக்கைகள்தானே இந்தத் துணிச்சலை அவர்களுக்குத் தருகிறது. தமிழக அரசு வேடிக்கை பார்க்கலாமா?

இவ்வாறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in