பருவமழையால் பாழ்படும் நெல் மூட்டைகளைப் பாதுகாத்து அவற்றை விரைவாகக் கொள்முதல் செய்க; ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்
மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்
Updated on
2 min read

பருவமழையால் பாழ்படும் நெல் மூட்டைகளைப் பாதுகாத்து, அவற்றை விரைவாகக் கொள்முதல் செய்து, விவசாயிகளின் வாழ்க்கையையும் நலனையும் உரிய நேரத்தில் காப்பாற்ற வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 30) வெளியிட்ட அறிக்கை:

"முப்போகம் விளைந்த நிலமெல்லாம் ஒரு போக விளைச்சலுக்கே போராடித் திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், விளைந்த நெல்லையும் முறையாகக் கொள்முதல் செய்யாமல் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வகையில் அலட்சியம் காட்டி வருகிறது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு.

தென்மேற்குப் பருவ மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், அதனை உணர்ந்து விவசாயத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், அதன் அலட்சியப் போக்கினால் கடலூர் மாவட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

நெல் கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறந்திருப்பதாக அரசு சொன்னாலும், அவை உரிய வசதிகளுடனும் பாதுகாப்புடனும் இருப்பதில்லை. கடலூர் மாவட்டத்தில் 22 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டதாக அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டபோதும், 11 நிலையங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன.

இதில், ராஜேந்திரபட்டணம் என்ற இடத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்திற்குச் சுற்றுவட்டார கிராமத்து விவசாயிகள் தங்கள் வயலில் விளைந்த நெல்லை மூட்டை மூட்டையாகக் கொண்டு வந்த நிலையில், அதனை உடனடியாகக் கொள்முதல் செய்வதற்கு வழியின்றி அங்கேயே அடுக்கி வைக்கச் செய்துள்ளது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்.

அடுக்கி வைக்கப்பட்ட மூட்டைகளை மூடுவதற்கு தார்பாலின், ப்ளாஸ்டிக் ஷீட் போன்றவை போதிய அளவில் இல்லாததாலும், வெறுந்தரையிலேயே மூட்டைகளை அடுக்கியதாலும், அண்மையில் பெய்த கனமழையால், 20 ஆயிரத்துக்கும் அதிகமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளன. கடலூர் மாவட்டத்தில் மட்டுமின்றி, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் இந்த அவலம் தொடர்கிறது.

டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையினால், அறுவடைக்குத் தயாராக உள்ள குறுவைப் பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பது ஒருபுறமென்றால், அறுவடை செய்யப்பட்ட பெரும்பாலான நெல் மூட்டைகள் தண்ணீரில் நனைந்து வீணாகியுள்ளன.

200-க்கும் அதிகமான அளவில் அரசு திறந்துள்ள நேரடிக் கொள்முதல் நிலையங்கள் பலவற்றுக்கு நிரந்தரக் கட்டிடம் கிடையாது. கிடங்குகள் அமைக்கப்படவில்லை. போதிய அளவிலான பாதுகாப்பு வசதிகள் இல்லை. மழைநீர் புகாமல் நெல் மூட்டைகளை மூடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இதனால் விவசாயிகள் பாடுபட்டு விளைவித்த நெல்லை சாலையோரத்தில் அடுக்கி வைத்து, கொள்முதல் நிலையத்தின் அழைப்புக்காகக் காத்திருக்க வேண்டிய அவலம் தொடர்கிறது.

அதுமட்டுமின்றி, 18% ஈரப்பதத்திற்குள் இருக்கும் நெல்லை மட்டுமே கொள்முதல் செய்யும் வழக்கத்தைத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கடைப்பிடிப்பதால், மழையில் நனைந்த நெல் மூட்டைகளில் ஈரப்பதம் அதிகமாகிவிடுகிறது. அவற்றை நேரடிக் கொள்முதல் நிலையங்களில் எடுப்பதில்லை. விவசாயிகளே அவற்றைக் காயவைத்து, ஈரப்பதம் நீக்கி, கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

ஏழை - எளிய விவசாயிகள் தங்கள் நெல்லைக் காய வைப்பதற்கு போதிய இடமின்றி, தார்ச்சாலைகளில் கொட்டி வைத்து வீணாகும் அபாயமும் ஏற்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அறுவடையைப் பார்க்கும் நெல் விவசாயிகள், அந்த அறுவடையில் கிடைத்த கண்மணிகளுக்கு இணையான நெல்மணிகள் வீணாவதைக் கண்ணீர் வழிந்தோடக் காணும் நிலைக்குத் தள்ளப்படுவது வேதனையிலும் வேதனையாகும்.

விவசாயி, விவசாயி என்று மூச்சுக்கு முந்நூறு தடவை தன்னைத்தானே கூறிக்கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, உண்மையான விவசாயிகளின் வாழ்வாதாரப் போராட்டம் பற்றிய கவனமும் இல்லை, கவலையும் இல்லை என்பதால், இதனை அவர் பார்வைக்குக் கொண்டு வந்து, உரிய நடவடிக்கை எடுக்கச் செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பும் எதிர்க்கட்சிக்கு இருக்கிறது.

பருவமழையால் பாழ்படும் நெல் மூட்டைகளைப் பாதுகாத்து, அவற்றை விரைவாகக் கொள்முதல் செய்து, விவசாயிகளின் வாழ்க்கையையும் நலனையும் உரிய நேரத்தில் காப்பாற்றித் தர வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்".

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in