

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் உள்ள அண்ணா சிலை பீடத்தில் காவிக் கொடி கட்டியதால் பரபரப்பு நிலவியது. சிலையை அவமதித்தோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு திமுகவினர் புகார் அளித்துள்ளனர்.
கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசியது, புதுவையில் எம்.ஜி.ஆர். சிலை மீது காவி துண்டு போர்த்திய சம்பவங்கள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்ணா சிலை பீடத்தில் காவி கொடி கட்டப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குழித்துறை சந்திப்பில் நீதிமன்ற சாலையில் பேரறிஞர் அண்ணாவின் முழு உருவ சிலை அமைந்துள்ளது. இந்த சிலையை சுற்றி அமைந்துள்ள பீடத்தின் இரும்பு கம்பி மீது நேற்று காவி கொடி கட்டப்பட்டிருந்தது.
மேலும் சிலை மீது உடைந்த பல்பு, மற்றும் உபயோகமற்ற பொருட்கள் வீசப்பட்டிருந்தது. அவ்வழியாக காலையில் சென்ற மக்கள், மற்றும் பயணிகள் சிலைப்பகுதியில் பறந்தவாறு இருந்த காவிக் கொடியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்த திமுகவினர் அங்கு திரண்டனர். திமுக எம்.எல்.ஏ. மனோதங்கராஜ், மற்றும் கட்சியினர் அண்ணா சிலை பீடத்தில் காவி கொடி கட்டப்பட்டதை கண்டித்து கோஷமிட்டனர். இதனால் பரபரப்பும், பதற்றமும் நிலவியது. அண்ணா சிலை பீடித்தில் காவி கொடி கட்டியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழித்துறை திமுக நகர செயலாளர் பொன் ஆசைத்தம்பி களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து போலீஸார் குழித்துறை சந்திப்பிற்கு வந்து அண்ணா சிலை பீடித்தில் கட்டியிருந்த காவி கொடியை அகற்றினர்.
மேலும் சிலையை அவமதிக்கும் வகையில் போடப்பட்டிருந்த பல்பு, மற்றும் உபயோகமற்ற கழிவு பொருட்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சிலைக்கு காவிக் கொடி கட்டியதால் அங்கு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்கும் வகையில் குழித்துறை சந்திப்பைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
குழித்துறை சந்திப்பு பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீஸார் காவிக் கொடியைப் போர்த்திய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில்; நேற்று நள்ளிரவு நேரத்தில் அண்ணா சிலை பீடத்தில் யாரோ காவிக் கொடியை கட்டி, உபயோகமற்ற பொருட்களை சிலைப் பகுதியில் வீசி எறிந்திருப்பதால் மனநலம் பாதித்த நபர்கள் யாரும் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவர் என்றனர்.
இந்நிலையில் குழித்துறை அண்ணா சிலை பீடத்தில் காவி கொடி கட்டி அவமதித்த நபர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமரி திமுக எம்.எல்.ஏ.க்கள் மனோதங்கராஜ், சுரேஷ்ராஜன், ஆஸ்டின் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.