Published : 30 Jul 2020 12:37 PM
Last Updated : 30 Jul 2020 12:37 PM

மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை: ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு

தமிழக அரசால் அமைக்கப்பட்ட மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். மாவட்டங்களில் பெருகி வரும் தொற்று காரணமாக ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக இதில் ஆலோசிக்கப்பட உள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நாளையுடன் (ஜூலை 31-ம் தேதி) முடிவடைகிறது. ஊரடங்கைத் தளர்வுகளுடன் நீட்டிப்பது குறித்து நேற்று மத்திய அரசு அறிவித்த நிலையில், நோய்த் தொற்று பாதிப்பு குறைவாக உள்ள மகாராஷ்டிரா, பிஹார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்துவிட்டன.

தமிழகத்தில், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசித்து முடிவெடுப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

அதன்படி, இன்று காலை முதல் சென்னையில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இதில் அமைச்சர்கள், தலைமைச் செயலர், சுகாதாரத் துறைச் செயலர் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

மருத்துவ நிபுணர்கள் குழுவின் பரிந்துரை, மத்திய உள்துறை மற்றும் சுகாதாரத் துறையின் பரிந்துரைகள், ஐசிஎம்ஆர்-ன் கருத்துகளை அறிந்து, அதன் அடிப்படையில் ஊரடங்கை எவ்வளவு நாட்களுக்கு நீட்டிப்பது என்பது குறித்து முதல்வர் பழனிசாமி இன்று அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6 கட்ட ஊரடங்கின்போது சென்னையில் அதிக அளவில் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. வீடுதோறும் மாநகராட்சி களப்பணியாளர்கள் காய்ச்சல் உள்ளதா, அறிகுறி உள்ளதா எனச் சோதனை நடத்தினர். இவ்வாறு சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கை காரணமாக சென்னையில் தினசரி தொற்று எண்ணிக்கை பாதியாகக் குறைந்தது. சென்னையில் நோய்த்தொற்றிலிருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

ஆனால், சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை மிக வேகமாகப் பரவி வருகிறது. பல மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிலையையும் கருத்தில் கொண்டு மருத்துவ நிபுணர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

கடந்த முறை நடந்த கூட்டத்தின் முடிவில் பொதுப் போக்குவரத்து கூடாது எனத் தெரிவித்துள்ளோம். அதே நேரம் ஊரடங்கினால் தீர்வு கிடையாது, பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம், தனிமனித இடைவெளி போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். தளர்வுகள் இருக்கலாம் எனத் தெரிவித்திருந்தனர்.

அதன் அடிப்படையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலானது. அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் முழு ஊரடங்கு அமலானது. தற்போது ஊரடங்கின் தளர்வுகள் குறித்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் அதையொட்டி முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் ஊரடங்கு உண்டா? தளர்வு உண்டா என்பது குறித்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவ நிபுணர் குழு கூட்டத்தில் முதன்முறையாகப் பேசிய முதல்வர் கரோனா கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிவித்தார். இந்தியாவில் அதிக அளவில் தமிழகத்தில்தான் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன என்று பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x