Last Updated : 30 Jul, 2020 10:32 AM

 

Published : 30 Jul 2020 10:32 AM
Last Updated : 30 Jul 2020 10:32 AM

விருதுநகர் அரசு மருத்துவமனையில் இருந்த 46 மரங்கள் வேரோடு அகற்றி மறுநடவு: பொதுப்பணித் துறை, ஓசை அமைப்புக்கு குவியும் பாராட்டு

விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திலிருந்து வேரோடு தோண்டி எடுக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டுள்ள மரங்கள்.

விருதுநகர்

விருதுநகரில் அரசு மருத்துவமனை விரிவாக்கப் பணிகளுக்காக வெட்டப்பட இருந்த 46 மரங்கள் வேரோடு அகற்றி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்- சாத்தூர் சாலையில் மாவட்ட விளையாட்டரங்கம் எதிரே வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு இருந்த பகுதியில் 28 ஏக்கர் பரப்பளவில் ரூ.380 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. அந்த வளாகத்திலிருந்த பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, புதிய அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கட்டுமானப் பணி நடை பெறவுள்ள இடத்தில் இருந்த 46 மரங்களை அகற்றத் திட்ட மிடப்பட்டது. மரங்களை வெட்டி அழிப்பதற்கு பதிலாக, வேறொரு இடத்தில் அவற்றை மறு நடவு செய்ய பொதுப்பணித் துறையினர் முடிவு செய்தனர்.

இதுகுறித்து கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் மரங்களுக்கு மறுவாழ்வுத் திட்ட அலுவலரும், ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான கே.சையதுவிடம் பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர். அவரது ஆலோசனையின்படி பொக்லைன், கிரேன் உள்ளிட்ட இயந்திரங்கள் மூலம் வேம்பு, அரசமரம், புங்கை, வாகை உள்ளிட்ட 46 மரங்களும் வேரோடு தோண்டப்பட்டு, அங் கிருந்து 6 கி.மீ. தொலைவில் கட்டப்பட்டுவரும் அரசு மருத்துவக் கல்லூரி சுற்றுச்சுவர் ஓரத்தில் வரிசையாக நடப்பட்டுள்ளன. தற்போது இந்த மரங்கள் அனைத்தும் துளிர்விட்டு மீண்டும் வளரத் தொடங்கியுள்ளன. இதையடுத்து பொதுப்பணித் துறை மற்றும் ஓசை அமைப்புக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கே.சையது கூறும்போது, மரங் களை வெட்டுவதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும். அதேநேரம், கட்டுமானம், சாலை விரிவாக்கம் போன்ற பணிகளுக்காக தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மரங்களை வெட்ட வேண்டியுள்ளது. அவற்றை வெட்டி அழிப்பதைவிட, வேரோடு அகற்றி மற்றொரு இடத்தில் நட்டு வளர்க்கலாம். மரங்களுக்கு மறுவாழ்வு தரும் இந்த முயற்சியை நாங்கள் சிறப்பாக முன்னெடுத்து வருகிறோம். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மட்டுமின்றி கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் இப்பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x