

சென்னை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த துரைசாமியின் பதவிக்காலம் கடந்த மே 26-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, புதிய துணைவேந்தரை நியமனம் செய்வதற்காக டெல்லி ஜவஹர்லால் நேரு (ஜேஎன்யூ) பல்கலை. துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் தலைமையில் தேடல் குழு அமைக்கப்பட்டது. அதன் உறுப்பினர்களாக மதுரை காமராஜர் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் மருதமுத்து, அழகப்பா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் ராமசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
புதிய துணைவேந்தர் பதவிக்கு இணையவழியில் 100-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அதில் தகுதியான 12 பேரை தேர்வு செய்து, காணொலியில் அவர்களிடம் தேடல் குழுவினர் நேற்று முன்தினம் நேர்காணல் நடத்தினர். அதன் அடிப்படையில் 3 பேர் கொண்ட இறுதிப் பட்டியலை தயாரித்து விரைவில் பல்கலை. வேந்தரான ஆளுநரிடம் தேடல் குழு சமர்ப்பிக்க உள்ளதாக
கூறப்படுகிறது. அதன்பிறகு, இறுதிப் பட்டியலில் உள்ளவர்களிடம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரடியாக நேர்காணல் நடத்தி அவர்களில் தகுதியான ஒருவரை துணைவேந்தராக நியமனம் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் அன்பழகன் விளக்கம்
இதற்கிடையில், சென்னை பல்கலை. துணைவேந்தர் நியமனம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் சென்னையில் செய்தியாளர்களிடம் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று கூறிய போது, ‘‘பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் என்பது முழுவதும் ஆளுநரின் அதிகாரத்துக்கு உட்பட்டது. இதில் மாநில அரசின் பங்கு எதுவும் இல்லை. மேலும்,
துணைவேந்தர்களாக தகுதியானவர்களே நியமிக்கப்படுகின்றனர்’’ என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 2 லட்சத்து 75,058 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் 1 லட்சத்து 78,952 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர். மாணவர்கள் கோரிக்கை விடுத்தால் விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிக்கப்படும்.
பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு இதுவரை 1 லட்சத்து 18,602 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் 91,423 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர்.
இறுதியாண்டு மாணவர்களுக்கு பருவத் தேர்வு நடத்துவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இதுதொடர்பாக மத்திய
அரசுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதேபோல, பருவத் தேர்வுகள், கல்லூரிகள் திறப்பு குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்கப்
பட்டுள்ளது. நிபுணர் குழு வழங்கும் பரிந்துரைகள், நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும்.
அரசு கலை,அறிவியல் கல்லூரிகளில் கடந்த 10 ஆண்டுகளில் 1,666 புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.