Published : 30 Jul 2020 07:26 AM
Last Updated : 30 Jul 2020 07:26 AM

ஜூலையில் வழக்கத்தைவிட 41% அதிக மழை; சென்னையில் 2 நாட்களாக கனமழை- குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சென்னையில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சென்னைக்கு வழக்கமாக வடகிழக்கு பருவமழைக் காலத்தில்தான் அதிக மழை கிடைக்கும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை காலத்தில் அதிக மழை கிடைத்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னை, புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. நேற்றும் விடிய, விடிய மழை பெய்தது. குரோம்பேட்டை பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மழைநீரில் மிதந்தன. திருமழிசை காய்கறி சந்தையில் பல இடங்களில் மழைநீர் தேங்கி, விற்பனை பாதிக்கப்பட்டது.

அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட 173-வது வார்டில் கனமழையால் சாலையோரத்தில் மரம் வேரோடு சாய்ந்தது. அதை மாநகராட்சி பணியாளர்கள் உடனுக்குடன் அகற்றினர்.

மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள 15 சுரங்க நடைபாதைகளிலும் மழைநீர் தேங்காமல் இருக்க, மாநகராட்சி அதிகாரிகள், உடனுக்குடன் நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். வழக்கமாக ஜூலை மாதத்தில் சென்னையில் சராசரியாக 110 மிமீ மழை பெய்யும். ஆனால்இம்மாதம் 155 மிமீ மழை பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 41 சதவீதம் அதிகம்.

கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,257 மில்லியன் கனஅடி. நேற்றைய நிலவரப்படி இந்த ஏரிகளில் 4,561 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. கடந்தாண்டு இதேநாளில் 16 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் இருப்பு இருந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் பூண்டி ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 6 மில்லி மீட்டரும், சோழவரம் ஏரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 8 மில்லி மீட்டரும், புழல் ஏரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 2 மில்லி மீட்டரும், செம்பரம்பாக்கம் ஏரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 39 மில்லி மீட்டரும் மழை பதிவானது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல், திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழையால், தாழ்வான சாலைகளில் நீர் தேங்கி வருகிறது.
நேற்று காலை 8 மணி வரை தாமரைப்பாக்கத்தில் 88 மி.மீ., பூந்தமல்லியில் 54 மி.மீ., செம்பரம்பாக்கத்தில் 39 மி.மீ., மழை பெய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x