

ஊரடங்கு நேரத்தில் இரவில் சாலையில் சுற்றுபவர் களை கைது செய்ய போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 126 நாட்களில் ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித் திரிந்தவர்களின் மீது 8 லட்சத்து 32 ஆயிரத்து 541 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 9 லட்சத்து 16 ஆயிரத்து 171 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். 6 லட்சத்து 56 ஆயிரத்து 563 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 19 கோடியே 8 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.
ஊரடங்கு நேரத்தில் இரவில் பெரும்பாலானவர்கள் சாலைகளில் சுற்றித் திரிவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, சாலைகளில் தேவையில்லாமல் சுற்றித் திரிபவர்களை கைது செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், தெருக்களுக்குள்ளும் போலீஸார் ரோந்து சென்று, தேவையில்லாமல் கூடி நின்று பேசிக் கொண்டிருப்பவர்களை கைது செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.