Published : 30 Jul 2020 07:02 am

Updated : 30 Jul 2020 07:02 am

 

Published : 30 Jul 2020 07:02 AM
Last Updated : 30 Jul 2020 07:02 AM

கரோனா வைரஸ் தொற்று: கர்ப்பிணிகள் என்ன செய்ய வேண்டும்?

covid-19-precaution-for-pregnant-women

த மிழகத்தில் நகரம், கிராமம் என வித்தியாசம் இல்லாமல் பரவிக் கொண்டிருக்கிறது கரோனா வைரஸ். இந்நிலையில், கர்ப்பிணிகள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல சிக்கல்களைச் சந்திக்கின்றனர். அதற்கு என்ன தீர்வு? பொதுவாக கர்ப்பிணிகளுக்கு கரோனா தொற்றும் வாய்ப்பு மிகவும் குறைவே. அவர்கள் பெரும்பாலும் வீட்டில் இருப்பதால் இது சாத்தியமாகிறது. ஆனாலும், வீட்டிலுள்ள மற்றவர்கள் வெளியில் சென்று வருவதால், கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையிலேயே குறைவாக இருக்கும்.இப்போது ஊடகங்கள் கிளப்பும் கரோனாபீதியால் பதற்றமும் மன அழுத்தமும் புதிதாக ஏற்படுகின்றன. அவையும் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து விடுகின்றன. இப்படியொரு சூழலில் மற்றவர்களை போலவே கர்ப்பிணிகளையும் வைரஸ் பாதிக்கிறது. முக்கியமாக கர்ப்பத்தின் கடைசி 3மாதங்களில் கரோனா ஆபத்து அதிகரிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அடுத்து, உடற்பருமன், நாட்பட்ட உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்,சுவாச நோய், ரத்தசோகை, குறை தைராய்டு போன்றவை கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்தால், கரோனா தொற்றுஆபத்தில் முடிகிறது. கர்ப்பிணிகளுக்கு ரத்தம் உறையும் தன்மை பொதுவாகவே அதிகரிக்கும் என்பதாலும் கரோனா தொற்று உள்ளவர்களுக்கு இதே பிரச்சினை ஏற்படுவதாலும் கர்ப்பிணிகளுக்கு முன்னெச்சரிக்கை அவசியமாகிறது.

இதுவரை வந்துள்ள புள்ளிவிவரப்படி, மேற்சொன்ன நோய்கள் இல்லாத கர்ப்பிணிகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டாலும் அதிக ஆபத்து உண்டாவதில்லை. கர்ப்பிணிக்கு நிமோனியா எனும் நுரையீரல் பிரச்சினை வந்தாலும் மிதமான நிலையில் இருக்கிறது. சிகிச்சையில் சரியாகி விடுகிறது. சிசுவுக்கும் பாதிப்பில்லை. குறிப்பாக, கரு கலைவதில்லை. குறைப் பிரசவம் ஆவதில்லை. வேறுஆரோக்கிய பிரச்சினைகள் இல்லையென்றால் சுகப்பிரசவமும் ஆகிறது. இயற்கை பிரசவம் வழியாக குழந்தைக்கு கரோனா தொற்றுவது இல்லை.

என்ன செய்ய வேண்டும்?

கர்ப்பிணிகள் வீட்டை விட்டு வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. புதிதாகதிருமணம் ஆனவர்கள் மாத விலக்கு தள்ளிப் போனதும் உடனே மருத்துவமனைக்கு வருகின்றனர். அப்படி வரத் தேவையில்லை. வீட்டில் இருந்து கொண்டே மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம். வீட்டில் தனி மனித இடைவெளி, முகக் கவசம் அணிவது, கைகளைச் சோப்பு போட்டு அடிக்கடி கழுவிக் கொள்வது என எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மருத்துவர் யோசனைப்படி ஆரோக்கிய உணவுகளைத் திட்டமிட்டு உண்ணுங்கள். ஃபோலிக் அமில மாத்திரைகள், ஜிங்க், வைட்டமின்-சி, வைட்டமின்-டி மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும். மாத்திரைகளை தவறாமல் சாப்பிட்டு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், குறை தைராய்டு, ரத்தசோகை போன்றவற்றை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.

பயிற்சிகள் அவசியம்

மாதக் கணக்கில் வீட்டிலேயே முடங்கி இருப்பதால், உடல் எடை அதீதமாகக் கூடிவிடக் கூடாது. நடைப்பயிற்சி முக்கியம். யோகா, சின்ன சின்ன உடற்பயிற்சிகள் செய்யலாம். பிரணாயாமம், தியானம் மிக நல்ல பயிற்சிகள்.

வழக்கமான வயிற்று அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைகளையும் தடுப்பூசி போடுவதையும் தள்ளிப் போட்டுக் கொள்ளலாமா என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். அதேநேரம், குழந்தையின் வளர்ச்சியில் பிறழ்வு இருக்கிறதா என்பதை அறிய முதல் 3 மாத கர்ப்பத்தில் எடுக்கப்படும் ‘நியூக்கல் ஸ்கேன்’, இடைப்பட்ட கர்ப்ப காலத்தில் எடுக்கப்படும் ‘அனாமலி ஸ்கேன்’ போன்றவற்றைத் தவிர்க்க முடியாது.

தொற்று இருந்தால்?

கரோனா தொற்று இருந்தவருடன் தொடர்பு இருந்தால், RT-PCR கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதில் தொற்று இருப்பதாக முடிவு வந்து, அறிகுறிகள் இல்லை என்றால், வீட்டிலேயே 2 வாரங்களுக்குத் தனிமைப்படுத்திக் கொள்ளலாம். அப்போது உடலின் வெப்பநிலையைப் பார்த்துக் கொள்வதும், பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கொண்டு ரத்த ஆக்ஸிஜன் அளவை அளந்து கொள்வதும் கரோனா பாதிப்பு அடங்குகிறதா, அதிகமாகிறதா என்பதைத் தெரிந்து கொள்ள உதவும்.

கரோனா அறிகுறிகள் இருந்தால், மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும். RT-PCR கரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்று முடிவு வந்து, அறிகுறிகள் காணப்படுமானால் அவர் கரோனா தொற்று உள்ளவராகவே கருதப்படுவார். மறுபரிசோதனையும் தேவைப்படும்.

கர்ப்பிணிகள் 8-வது கர்ப்ப மாதத்துக்குப் பிறகு குழந்தையின் அசைவுகளைக் குறித்துக் கொள்ள வேண்டும். அசைவில் மாறுதல் தெரிந்தால் உடனே மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். கர்ப்பிணிகள் பிரசவத் தேதிக்கு ஒரு வாரத்துக்கு முன்பு RT-PCR கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது கட்டாயம்.

தாய்ப்பால் ஊட்டுதல்

தாய்ப்பால் மூலம் கரோனா பரவாது என்பதால் குழந்தை பிறந்தவுடன் வழக்கம் போல் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்து விடலாம். தாயும் குழந்தையும் தனித்தனி அறைகளில் இருந்தால், ‘பிரஸ்ட் பம்ப்’ மூலம் தாய்ப்பாலை எடுத்து குழந்தைக்குக் கொடுக்கலாம். அப்போது ‘பிரஸ்ட் பம்ப்’பையும் சுத்திகரித்துக் கொள்ள வேண்டும். அது மார்பகத்தில் பொருந்தும் இடங்கள் முழுவதையும் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்தப் பாதுகாப்பு முறைகள் எல்லாமே தாய்க்குத் தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவு வந்த பிறகும் 2 வாரம் வரை பின்பற்ற வேண்டியது முக்கியம்.

கட்டுரையாளர்: பொதுநல மருத்துவர்


கரோனா வைரஸ் தொற்றுகர்ப்பிணிகள் என்ன செய்ய வேண்டும்கர்ப்பிணிகள்கரோனா வைரஸ்நோய் எதிர்ப்பு சக்திஉடற்பருமன்நாட்பட்ட உயர் ரத்த அழுத்தம்நீரிழிவுஇதய நோய்சுவாச நோய்ரத்தசோகைகுறை தைராய்டு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author