Published : 29 Jul 2020 10:51 PM
Last Updated : 29 Jul 2020 10:51 PM

வரைமுறை இல்லாமல் பதிவுகள்; யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை கண்காணிக்க சென்சார் அமைப்பு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு


யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனிவாரியம் ஒன்றை அமைக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் மதம், ஜாதி, தனிப்பட்ட நபர்கள் குறித்த அவதூறு வரலாற்றை திரித்து, இரு பிரிவினருக்கிடையே வன்முறையை தூண்டுவது, ஆபாசமாக, அவதூறாக சித்தரிப்பது, பெண்களை அவதூறாக சித்தரித்து செய்திகள் போடுவது என பல்வேறு விஷயங்கள் பேசுபொருளாகவும், சர்ச்சையாகவும் மாறிவருகிறது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் ஒன்றை அமைக்க உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்..

அவரது மனுவில், “கரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் மூலம் பயின்று வருகின்றனர். பல்வேறு தரப்பினரும் தற்போது வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் வேலை செய்து வருகின்றனர். இதனால் இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதுபோன்ற சூழலில் எந்தவித கட்டுப்பாடும் இன்றி யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய வீடியோக்கள் பதிவிடப்படுகிறது.

குறும்படம் என்ற பெயரில் ஆபாச வீடியோக்கள் அதிகம் பதிவிடப்படுகிறது. இந்தியாவில் கோடிக்கணக்கான நுகர்வோர் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்ற நிலையில், அதற்கென எந்தவித தணிக்கை முறையும் இல்லை.

திரைப்படங்களை தணிக்கை செய்ய சென்சார் போர்டு உள்ளதைப் போல சமூக வலைதளங்களை தணிக்கை செய்யவும் தனி அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். இவ்வாறு சமூக வலைதளங்களில் பதிவேற்றப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய வாரியம் அமைக்கும் வரை, சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட தடை விதிக்க வேண்டும்” என மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x