Published : 29 Jul 2020 10:03 PM
Last Updated : 29 Jul 2020 10:03 PM

அரசு உதவி பெறும்/ பெறாத கல்வி நிறுவனங்களை இ.எஸ்.ஐ திட்டத்தின் கீழ் கொண்டுவரும் அரசின் முடிவை எதிர்த்த வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

அரசு உதவிபெறும் மற்றும் உதவிபெறாத கல்வி நிலையங்களை இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் கொண்டு வரும் அரசாணையை எதிர்த்து கல்வி நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அரசு உதவிபெறும் மற்றும் உதவிபெறாத கல்வி நிலையங்களை தொழிலாளர் அரசு ஈட்டுறுதி சட்டத்தின் (இ.எஸ்.ஐ. சட்டம்) கீழ் கொண்டு வர உள்ளதாக தமிழக அரசின் தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை அறிவிப்பாணை வெளியிட்டது.

இதனை எதிர்த்து அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம், சி.எஸ்.ஐ. பெயின் பள்ளி, பேட்ரிசியன் கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட பல தனியார் கல்லூரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2019, 2020-ம் ஆண்டுகளில் வழக்குகள் தொடர்ந்திருந்தன.

இந்த வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, அனிதா சுமந்த், பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய சிறப்பு முழு அமர்வை அமைத்து தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி உத்தரவிட்டார்.

அந்த அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தொழில் நிறுவனங்கள் போல கல்வி நிறுவனங்களை கணக்கிடக்கூடாது என்றும், இ.எஸ்.ஐ. சட்டத்திலிருந்து கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசு தரப்பில், “சமூக நல திட்டங்களை அதை தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்ற சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி மற்றும் இரு நீதிபதிகள் அமர்வு உறுதிபடுத்தி உள்ளன. இதே கோரிக்கைகளுடன் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடியும் செய்யபட்டுள்ளது.

தனியார் கல்வி நிறுவனங்களில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான ஆரோக்கியத்தை உறுதிபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட விதிகளை ரத்து செய்யக்கூடாது” என்று வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், கல்வி நிறுவனங்களை இ.எஸ்.ஐ. சட்டத்தின் கீழ் கொண்டு வந்த தமிழக அரசின் அரசாணை செல்லும் என கூறி, அனைத்து கல்வி நிலையங்களின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வால் தங்கள் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், அந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக அகில இந்திய தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x