

கிரானைட் முறைகேடு குறித்து விசாரித்து வரும் சட்ட ஆணையர் சகாயம், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் அளித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
மதுரை மாவட்டத்தில் நடந்துள்ள கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற முதல் அமர்வு, மதுரை மாவட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக சட்ட ஆணையராக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை நியமித்தது.
கிரானைட் முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து வரும் அவர், நீதிமன்றத்தில் அவ்வப்போது அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார். இந்த நிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சகாயம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் மனுவொன்றைத் தாக்கல் செய்து வாதிட்டார்.
அப்போது அவர் “நீதிமன்றத்துக்கு தாக்கல் செய்ய வேண்டிய அறிக்கையின் நகல் நூற்றுக்கணக்கான பக்கங்களைக் கொண்டது. கிரானைட் குவாரி தொடர்பாக பல பிரச்சினைகள் இருக்கின்றன. அதுபற்றி ஆழமாக விசாரிக்க வேண்டியுள்ளது. சில விவரங்களை சரிபார்த்து சிறப்பு கவனத்துடன் இறுதி அறிக்கை தயாரிக்க 2 வாரம் அவகாசம் அளிக்க வேண்டும்” என்று கோரினார்.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு இவ்வழக்கை விசாரித்து பிறப்பித்த உத்தரவு:-
சட்ட ஆணையர் கேட்டுக் கொண்டபடி இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இரண்டு வாரம் கால அவகாசம் அளிக்கப்படுகிறது. குறிப்பிட்ட இடத்தில் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அட்வகேட் ஜெனரல் உறுதி அளித்துள்ளார். சட்ட ஆணையர் சகாயத்திடம் வாக்குமூலம் அளித்தவர்களுக்கு முறையான போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்டோபர் 15-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.