

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை தொடர்பாக விவாதிக்க, நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என, திமுக அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை - 2020, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்களை நீர்த்துப்போகச் செய்வதாக உள்ளன எனவும், இதனால், சுற்றுச்சூழல், இயற்கை வளம் சுரண்டப்பட வாய்ப்புள்ளது எனவும், திமுக உள்ளிட்ட கட்சிகளும், சூழலியல் ஆர்வலர்களும் விமர்சித்து வருகின்றனர். எனவே, வரைவு அறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என நாடு முழுவதும் பல்வேறு தரப்பில் குரல்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இது தொடர்பாக மத்திய அறிவியல் - தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் ஜெய்ராம் ரமேஷ் எம்.பி.க்கு இன்று (ஜூலை 29) திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி எழுதிய கடிதம்:
"சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை - 2020, ஏற்கெனவே உள்ள கண்காணிப்பு விதிமுறைகளை நீர்த்துப்போகச் செய்வதாக உள்ளது. மேலும், திட்டங்கள் குறித்து பொதுமக்களின் கருத்துகளைக் கேட்பதைத் தடுக்கிறது. எனவே, இந்த வரைவு அறிக்கையை முற்றிலும் திரும்பப் பெற வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இத்தகைய முக்கியமான நடவடிக்கையானது, நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படாமல் அனுமதிக்கப்படக் கூடாது. எனவே இதுகுறித்து விவாதிக்க நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தைத் தாங்கள் கூட்ட வேண்டும்"
இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.