

கரோனா ஊரடங்கால் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் டிசம்பர் மாதம் வரை சுற்றலா வாகனங்களுக்கான சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரையில் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஓட்டுநர் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு அனைத்திந்திய ஓட்டுஅர் முன்னேற்றக் கழகத்தின் மதுரை மாவடத் தலைவர் எஸ்.பி.கணேசன் தலைமை வகித்தார். தென்னிந்திய நுகர்வோர் மக்கள் உரிமை பாதுகாப்பு கவுன்சில் தலைவர் கு.மணவாளன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் முருகன் கூறுகையில், "கரோனா ஊரடங்கால் கடந்த 6 மாதங்களாக சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படவில்லை. இருப்பினும் சுற்றுலா வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்களுக்கு சாலை வரி செலுத்துமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
தவறினால் உரிமம் ரத்து செய்யப்படும், அபராதம் விதிக்கப்படும் என மிரட்டுகின்றனர். எனவே உரிமம் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் டிசம்பர் மாதம் முடிய சாலை வரியை ரத்து செய்ய வேண்டும்.
ஓட்டுநர் உரிமம் , கனரக வாகன உரிமம் மற்றும் பேட்ஜ் வைத்திருக்கும் ஓட்டுநர்கள் உயிரிழந்தால் அரசு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும்.
ஓட்டுநர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். பல சுங்கச்சாவடிகள் ஒப்பந்தம் முடிந்த பிறகும் செயல்பட்டு வருகின்றன. ஒப்பந்தம் முடிந்த சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும். கரோனா ஊரடங்கால் ஏற்கெனவே பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில் 17 முறை டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்.
தமிழகத்தில் மேக்சி கேப், சுற்றுலா வாகனம், வேன், கார், சுற்றுலா பஸ், ரூட் பஸ், லாரி அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் முடிய மாதம் ரூ.5 ஆயிரம் வீதம் நிவாரண நிதி வழங்க வேண்டும்" என்று கூறினார்.