ஊரடங்கு விதிகளை மீறியதாக திருச்சியில் தனியார் நிதி நிறுவனத்துக்கு சீல்; பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

வருவாய்த் துறையினரால் சீல் வைக்கப்பட்ட தனியார் நிதி நிறுவனம். | படம்: ஜி.ஞானவேல்முருகன்.
வருவாய்த் துறையினரால் சீல் வைக்கப்பட்ட தனியார் நிதி நிறுவனம். | படம்: ஜி.ஞானவேல்முருகன்.
Updated on
2 min read

ஊரடங்கு விதிகளை மீறியதாக திருச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்துக்கு வருவாய்த் துறை அலுவலர்கள் இன்று சீல் வைத்தனர்.

திருச்சி மாவட்டத்தில் அரசின் உத்தரவின்படி சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதையொட்டி, மாநகராட்சிப் பகுதிகளில் வீடுகளில் நடைபெறும் திருமணம் மற்றும் இதர சுப நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் கலந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், நிகழ்ச்சிகள் குறித்துத் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தகவல் தெரிவித்து, அனுமதி பெற்று, அதன் பின்னரே நடத்த வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல், ஊரடங்கு விதிகளை மீறுவது சட்டப்படி தண்டனைக்குரியது என்று திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவும் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன்படி, அரசின் பொது ஊரடங்கு உத்தரவை மீறினால் இ.த.ச. 1860 பிரிவு 188, உயிர்க்கொல்லி நோயைப் பரப்பும் விதமாக கவனக்குறைவாக நடந்துகொண்டால் இ.த.ச. 1860, பிரிவு 269, உயிர்க்கொல்லி நோயைப் பரப்பும் விதமாக அலட்சியமாக நடந்துகொண்டால் இ.த.ச. 1860, பிரிவு 270, தெரிந்தே தனிமைப்படுத்துதல் உத்தரவை மீறினால் இ.த.ச. 1860, பிரிவு 271 மற்றும் ஊரடங்கு உத்தரவை மீறினால் கொள்ளை நோய் தடுப்புச் சட்டம் 1897 பிரிவு 3 மற்றும் தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939 பிரிவு 134 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் தண்டிக்கத்தக்கவை என்று அறிவித்திருந்தது. இதையெல்லாம் மீறுவோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், திருச்சியில் மன்னார்புரம் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஏராளமானோர் திரண்டிருப்பதாக இன்று (ஜூலை 29) தகவல் கிடைத்தது. இதன்பேரில், திருச்சி கிழக்கு வட்டாட்சியர் மோகன், பொன்மலை காவல் உதவி ஆணையர் பாலமுருகன் உள்ளிட்டோர் அங்கு சென்று ஆய்வு நடத்தியதில், 100-க்கும் அதிகமானோர் அங்கு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, ஊரடங்கு விதிகளை மீறியதாக அந்த தனியார் நிதி நிறுவனம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

தொடர்ந்து, ஊரடங்கு விதிகளை மீறியதாக இந்திய தண்டனைச் சட்டம், கொள்ளை நோய் தடுப்புச் சட்டம், தமிழ்நாடு பொது சுகாதார சட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டம் (2005) 51 (பி) ஆகியவற்றின் கீழ் அந்த நிதி நிறுவன உரிமையாளர் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததுடன், வெளி மாவட்டங்களில் இருந்து வாகன பாஸ் இன்றி நிதி நிறுவனத்துக்கு வந்தவர்களின் கார்களைப் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து கிழக்கு வட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறுகையில், "திருச்சி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் 5 பேருக்கு மேல் கூடும் அனைத்துவித கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை மீறி அந்த நிதி நிறுவனத்தில் 147 பேர் இருந்தனர். மேலும், கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர். மாநகராட்சி அலுவலகத்தில் உரிய அனுமதியும் பெறவில்லை. நிதி நிறுவனத்தின் நடவடிக்கை, நோயைப் பரப்பும் செயல். எனவே, கோட்டாட்சியர் உத்தரவின்பேரில் அந்த நிதி நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in