Published : 29 Jul 2020 06:22 PM
Last Updated : 29 Jul 2020 06:22 PM

கரோனாவில் இறந்தவர்களின் முகத்தைப் பார்க்கக் குடும்பத்தினரை அனுமதிக்க வேண்டும்: தமிமுன் அன்சாரி கோரிக்கை

நாகப்பட்டினம்

கரோனாவில் இறந்தவர்களின் முகத்தைப் பார்க்க அவர்களது குடும்பத்தினரை அனுமதிக்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும், நாகப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

''நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதனால் ஏற்படும் மரணங்களும் தற்போது அதிகரித்துள்ளன. இறந்தவர்களின் இறுதிச் சடங்குகள் அவரவர் மத வழக்கங்களின்படி உரிய மரியாதையுடன் நடைபெற அனுமதிக்க வேண்டும் என நீதிமன்ற வழிகாட்டல்கள் உள்ளன. நீதிமன்ற வழிகாட்டல்கள் மதிக்கப்படும் அதே வேளையில், இறந்தவர்களின் குடும்பத்தினரின் நியாயமான சில எதிர்பார்ப்புகளையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

முக்கியமாக, இறந்தவர்களின் முகத்தை இறுதியாக ஒருமுறை பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் விரும்புகிறார்கள். இது மிகவும் நியாயமான கோரிக்கையாகும். தங்கள் பாசத்திற்குரியவர்களைப் பலி கொடுத்துவிட்டு நிற்கும் உறவுகளின் துயரத்தை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. எனவே, கரோனாவால் இறந்தவர்களின் முகத்தை இறுதியாக ஒருமுறை பார்க்க, குடும்ப உறுப்பினர்கள் அதிகபட்சம் 10 பேர் வரை அனுமதிக்கப்படுவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.

பொது நலன் கருதி, அவர்கள் உரிய பாதுகாப்புக் கவசங்களுடன் வர நிபந்தனை விதிக்கலாம். இது குறித்து தமிழக அரசு மனிதாபிமானத்தோடு நல்ல முடிவெடுக்க வேண்டும்''.

இவ்வாறு தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x