

கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் அறுவடை தொடங்கவிருக்கும் நிலையில், பகுதி வாரியாக தாமதமின்றி கொள்முதல் மையங்களை அரசு திறக்கவேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து ’இந்து தமிழ்’ இணையத்திடம் பேசிய கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினர் ஆஸ்டின், “கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட தோவாளை ஒன்றியத்தில் 15 ஆயிரம் ஏக்கரிலும், அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் 5 ஆயிரம் ஏக்கரிலும், இராஜக்கமங்கலம், பறக்கை, சுசீந்திரம், பால்குளம் பத்து பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரிலும் நெல் பயிரிடப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் சுமார் 22 ஆயிரம் ஏக்கரில் விளைந்திருக்கும் நெல்லைக் கொள்முதல் செய்வதற்கான எந்த முன்னேற்பாடுகளையும் அரசு இதுவரை செய்யவில்லை. முந்தைய ஆண்டுகளில் இந்த நேரத்தில் எல்லாம் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே கொள்முதல் மையங்களில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில் பாரபட்சம் காட்டுகிறார்கள். ஈரப்பதம் அதிகமாக இருப்பதாகப் பல விவசாயிகளின் நெல்லைக் கொள்முதல் செய்யாமல் இருப்பது குமரி மாவட்டத்தில் காலம், காலமாகத் தொடர்கிறது. கடலும் மேற்குத் தொடர்ச்சி மலையும் சூழ்ந்த மாவட்டம் என்பதால் இயல்பாகவே இங்கு காற்றில் ஈரப்பதம் அதிகம் இருக்கும். ஆனால், ஈரப்பதத்தைக் காரணம் காட்டிக் கொள்முதல் மையங்களில் நெல்லைக் கொள்முதல் செய்ய மறுப்பதால் வெளிச் சந்தையில் குறைவான விலைக்கு விற்கும் நிலை உண்டாவதும் ஆண்டாண்டுகளாகத் தொடர்கிறது. இந்தச் சூழலில் நடப்பாண்டில் இதுவரை கொள்முதல் மையங்களே திறக்காமல் இருப்பது இன்னும் அதிர்ச்சியளிக்கிறது.
தோவாளை ஒன்றியத்தில் தாழக்குடி, திட்டுவிளை, செண்பகராமன்புதூர் பகுதிகளில் செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் மையங்கள் இந்த ஆண்டில் இன்னும் திறக்கப்படவில்லை. அதேபோல் தேரூரில் உள்ள நெல் கொள்முதல் மையம் கடந்த மூன்றாண்டு காலமாகச் செயல்படவில்லை. இதனால் மிக அதிக அளவில் நெல் சாகுபடி செய்யும் தேரூர் பகுதி விவசாயிகள், அதிக தூரம் அலையவேண்டிய சூழல் உள்ளது. பறக்கை பத்து பகுதியில் தற்காலிகமாக, புத்தளம் உப்பளம் அருகில் கொள்முதல் மையம் செயல்பட்டு வந்தது. தற்போது இந்தக் கொள்முதல் மையங்கள் எல்லாம் செயல்படாத காரணத்தால் சுமார் 5 ஆயிரம் மூட்டை நெல்லை, நாகர்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் கொண்டுபோய் விவசாயிகள் இருப்பு வைத்துள்ளார்கள்.
மாவட்ட ஆட்சியர் நெல் கொள்முதல் செய்வதற்கான உத்தரவைத் தாமதமின்றி உடனே வழங்கினால்தான், விவசாயிகளின் நெல்லை அதிகாரிகளால் கொள்முதல் செய்யமுடியும். அரசு இதுவரை கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஆட்சியர் இவ்விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு கொள்முதல் மையங்களைத் திறந்து, ஒவ்வொரு பகுதியிலும் உற்பத்தியாகும் நெல்லைக் கொள்முதல் செய்வதற்கும் ஏற்கெனவே ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வைக்கப்பட்டு உள்ள நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்வதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்றார்.