

புதுச்சேரி முதல்வர் நிவாரண நிதி தவறாகப் பயன்படுத்தப்படுவதாக மாநில பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
காரைக்கால் மாவட்ட பாஜக செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 29) காரைக்காலில் நடைபெற்றது. கூட்டத்துக்குக் கட்சியின் மாவட்டத் தலைவர் ஜெ.துரை சேனாதிபதி தலைமை வகித்தார். கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவரும், நியமன சட்டப்பேரவை உறுப்பினருமான வி.சாமிநாதன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.
மாநில துணைத் தலைவர்கள் எம்.அருள்முருகன், நளினி கணேஷ்பாபு, செல்வம், செயலாளர் சகுந்தலா, மாநில மகளிர் அணி தலைவர் ஜெயலட்சுமி, மாநில இளைஞரணி துணைத் தலைவர் கணேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பின்னர் வி.சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேலைகளை பாஜக தொடங்கியுள்ளது. நான்கு ஆண்டுகளாக புதுச்சேரியில் முதல்வர் வி.நாராயணசாமி தலைமையிலான ஆளும் அரசு ஒரு சதவீதம் கூட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. காரைக்கால் மாவட்டத்தில் எவ்வித வளர்ச்சியும் இல்லை. புதுச்சேரி அரசின் பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்பை முழுமையாக ஏமாற்றிவிட்டது. முதல்வர் நிவாரண நிதி தவறாக பயன்படுத்தப்படுகிறது. கரோனா நடவடிக்கைகளுக்காக முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ஒரு ரூபாய் கூட பயன்படுத்தப்படவில்லை.
கரோனா தடுப்பு நவடிக்கைகளால் அனைத்து வகையான தொழிலாளர்களும் வேலைவாய்ப்பின்றி வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரசு உடனடியாக ரூ.5,000 வழங்க வேண்டும். நியாயவிலைக் கடைகள் மூலமாக அரிசியும், காய்கறியும் வழங்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான ஏற்பாடுகள், வென்டிலேட்டர், போதுமான மருத்துவர்கள், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் சரியாக இல்லை. தனியார் தங்கும் விடுதிகளை தற்காலிக கரோனா வார்டுகளாக மாற்றியமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரோனா பாதிப்பு உச்சமடைந்து வரும் நிலையில், புதுச்சேரி அரசு மெத்தனமாக இருந்தால் உயிரிழப்புகள் அதிகமாகும். காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் எதுவுமில்லை. சுகாதாரத்துக்கு முன்னுரிமை கொடுத்து நிதியை செலவிட்டு மக்களை பாதுகாக்க வேண்டும். தற்காலிக அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும்.
காரைக்கால்-பேரளம் அகல ரயில் பாதை அமைக்கும் பணி தடைபட்டுள்ளதற்கு மத்திய அரசு காரணமல்ல. காரைக்கால் பகுதியில் புறவழிச்சாலை அமைப்பது உள்ளிட்ட பல பணிகள் தாமதமாக நடக்கின்றன. மத்திய அரசு நிதியை ஒதுக்கீடு செய்துவிட்டது. மாநில அரசு தனது இயலாமை காரணமாகவே மத்திய அரசை குறை சொல்கிறது. ஒரு திட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை வேறு திட்டங்களுக்கு மாற்றிப் பயன்படுத்தும் முறையை இந்த அரசு கையாண்டு வருகிறது. திட்டங்களைத் தடுப்பதாக தேவையின்றி துணைநிலை ஆளுநர் மீது குறை சொல்லி வருவது தவறானது. மதுக்கடைகளை பொது ஏலத்தில் விட்டால், கேபிள் அரசுடமையாக்கப்பட்டால் ஒரு வருடத்துக்கு அனைவருக்கும் ஊதியம் வழங்க முடியும்" என்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள், மருந்துகள் சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் இல்லாத காரணத்தால் வெளி மாநிலத்துக்குச் சென்று சிகிச்சை பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.
காரைக்கால் மாவட்ட வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட தனியார் கப்பல் துறைமுகத்தில் உள்ளூர் பணியாளர்களை நீக்கிவிட்டு, வெளிமாநில பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. படித்தத் தகுதியான உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். மாநில அரசு துறைமுக துறைக்கு இயக்குநரை நியமிக்க வேண்டும்.
உயர்கல்வி சேர்க்கைக்கு சான்றிதழ்கள் பெறுவதற்காக மாணவர்கள் அலைக்கழிக்கப்படுவதை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
பிரதமர் செப்டம்பர் மாதம் வரை அறிவித்த இலவச அரிசியை மக்களுக்கு இன்று வரை சேர்க்காத மாநில அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. அரிசி விநியோகத்தில் நியாயவிலைக் கடை ஊழியர்களை பயன்படுத்த வேண்டும்.
கடந்த ஒரு வார காலமாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுப்பணித்துறை ஊழியர்கள் குறித்து அரசு எவ்வித அக்கறையும் காட்டாதது கண்டிக்கத்தக்கது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.