

வணிக நிறுவனங்களை இரவு 9 மணி வரை இயங்க அனுமதிப்பதோடு திரையரங்குகள், தங்கும் விடுதிகள் செயல்படவும் அனுமதிக்க வேண்டும் என காரைக்கால் 'சேம்பர் ஆஃப் காமர்ஸ்' புதுச்சேரி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து காரைக்கால் 'சேம்பர் ஆஃப் காமர்ஸ்' (Chamber of Commerce) தலைவர் ஏ.முத்தையா, செயலாளர் எம்.மகேஸ்வரன் ஆகியோர் புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமிக்கு இன்று (ஜூலை 29) அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
"மத்திய அரசு முதல் முறையாக கடந்த ஆண்டு வெளியிட்ட நல்லாட்சிக்கான குறியீட்டில் புதுச்சேரி மாநிலம் மனிதவள மேம்பாடு, பொது சுகாதாரம், நீதி மற்றும் சட்டம் - ஒழுங்கு ஆகிய நான்கு துறைகளில் முதலிடத்தைப் பிடித்ததோடு, யூனியன் பிரதேசங்களிலும் முதலிடத்தைப் பிடித்ததுள்ளது. இதற்காக கடுமையாக உழைத்த முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களை காரைக்கால் 'சேம்பர் ஆஃப் காமர்ஸ்' நன்றியுடன் பாராட்டுகிறது.
கரோனா நோய்த் தொற்றால் புதுச்சேரி மாநில பொருளாதாரம் கடுமையாக பாதித்துள்ள நிலையிலும் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் பொருளாதார சிக்கலை மாநிலமும், வியாபாரிகளும், மக்களும் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். இக்காலக்கட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகளால் பல்வேறு இன்னல்களை சந்திக்க்கும் நிர்ப்பந்தத்திற்கு வணிகர்கள் ஆளாக்கப்பட்டனர்.
இந்நிலையில், காரைக்கால் 'சேம்பர் ஆஃப் காமர்ஸ்' வேண்டுகோளை ஏற்று புதுச்சேரி முதல்வர், வேளாண்துறை அமைச்சர், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆகியோரின் அறிவுறுத்தலால் தற்போது அரசுத்துறை அதிகாரிகள் வியாபாரிகளை மனிதாபிமானத்துடன் நடத்தி நல்லுறவு மேம்பட செய்து கொண்டிருக்கின்றனர். இதற்கு காரைக்கால் 'சேம்பர் ஆஃப் காமர்ஸ்' நிர்வாகிகள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
பொது முடக்கம் முடிவுக்கு வரவுள்ள நிலையில் ஆக.1-ம் தேதி முதல் அனைத்து விதமான வணிகமும் வழிகாட்டுதல்கள் மற்றும் சட்ட விதிமுறைகளை பின்பற்றி இயல்பு நிலைக்குத் திரும்பும் வகையிலும், அனைத்துக் கடைகளையும் இரவு 9 மணி வரை திறந்து வைக்கும் வகையிலும் புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இயங்குவதற்கு இதுவரை அனுமதி அளிக்கப்படாத தொழில்களான திரையரங்குகள், தங்கும் விடுதிகள் மற்றும் வாகன போக்குவரத்து உள்ளிட்டவற்றை சட்ட விதிகளுக்குட்பட்டு இயங்குவதற்கு அனுமதிக்க புதுச்சேரி அரசு ஆவண செய்ய வேண்டும்"
இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.