Published : 29 Jul 2020 03:15 PM
Last Updated : 29 Jul 2020 03:15 PM

சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரம்; மாநில அரசுக்கு உள்ள உரிமையைப் பறிகொடுக்கக் கூடாது: ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தில் அதிமுக அரசு அமைதி காத்து, மாநில அரசுக்கு உள்ள உரிமையைப் பறிகொடுத்து கலை மற்றும் அறிவியல் கல்வியைக் காவிமயமாக்கும் முயற்சிக்கு நிச்சயம் அனுமதித்திடக் கூடாது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 29) வெளியிட்ட அறிக்கை:

"வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் நியமனம் செய்வதில் வெளிப்படைத்தன்மைக்கு மிகப்பெரிய இரும்புத்திரை அமைத்துவிட்டு, துணைவேந்தர் தேர்வு நடைபெற்று வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது.

இப்பதவிக்கு தேர்வுக்குழு (Search Panel) அமைப்பதிலேயே மாணவர்கள் நலனில் அக்கறையே இல்லாத பொறியியல் கல்வி பின்புலம் உள்ள டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத் துணைவேந்தரைத் தலைவராக நியமித்து, தமிழ்நாட்டில் உள்ள கல்வியாளர்கள் எல்லாம் அவமரியாதைக்கும் அவமதிப்புக்கும் உள்ளாக்கப்பட்டார்கள்.

அதன்பிறகு இப்பதவிக்கு விண்ணப்பித்துள்ள 177 பேரில் உத்தரப் பிரதேசம், டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து மட்டும் 30 பேர் விண்ணப்பித்துள்ளதும் - தற்போது அவ்வாறு விண்ணப்பித்தவர்களில் 12 பேரை மட்டும் இறுதிக்கட்ட நேர்காணலுக்கு அழைத்து, அந்த நேர்காணலையும் கூட காணொலிக் காட்சி மூலம் நேற்று நடத்தியிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் துணைவேந்தரைத் தேர்வு செய்யும் பொறுப்பில் டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய துணைவேந்தரை நியமித்தது முதல் கோணல்!

177 பேரில் எப்படி 12 பேரை மட்டும் நேர்காணலுக்கு அழைத்தார்கள் என்பது அடுத்தகட்ட இருட்டடிப்பு.

அப்படி அழைக்கப்பட்டவர்களிடம் காணொலிக் காட்சி மூலம் கோவிட்-19 நெருக்கடியிலும் இப்போது நேர்காணல் நடத்தியிருக்கிறார் தேர்வுக் குழுத் தலைவர் என்பது, தொடக்கத்திலிருந்து இறுதி வரை ஒட்டுமொத்தமாக மர்மமான நடைமுறை மூலமாகவே துணைவேந்தர் தேர்வு நடைபெறுவதைக் காட்டுகிறது.

வெளிப்படைத்தன்மை இதுவரை நடைபெற்றுள்ள அனைத்து நடவடிக்கைகளிலும் திட்டமிட்டு விடை கொடுக்கப்பட்டு 163 ஆண்டு புகழ்பெற்ற சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்க அதிமுக அரசும் வேந்தரும் இணைந்து செயல்படுவது மிகுந்த வேதனைக்குரியது.

ஆகவே, சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் அதிமுக அரசும், வேந்தர் பொறுப்பில் உள்ள தமிழக ஆளுநரும் வெளிப்படைத்தன்மையை நிலைநாட்டும் விதத்தில், விண்ணப்பித்தவர்களில் 12 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டது எதனடிப்படையில்? அவர்களில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர்? என்பதை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுடன் பாரம்பரியப் பெருமையுடன் நீண்ட நெடிய காலமாக பிண்ணிப் பிணைந்துள்ள ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகம். அதனால் இந்தப் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்தவர்களில் தமிழ்நாட்டில் உள்ள தலைசிறந்த கல்வியாளர் ஒருவரையே துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என்றும் அதை அதிமுக அரசு உறுதி செய்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

'வேந்தர்தான் நியமிக்கிறார். எங்களுக்கு ஒன்றும் தெரியாது' என அண்ணா பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் போன்றவற்றில் அமைதி காத்ததுபோல், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் அமைதி காத்து, மாநில அரசுக்கு உள்ள உரிமையை அதிகாரத்தைப் பறிகொடுத்து கலை மற்றும் அறிவியல் கல்வியைக் காவிமயமாக்கும் முயற்சிக்கு நிச்சயம் அனுமதித்திடக் கூடாது என்று எச்சரிக்கை செய்திட விரும்புகிறேன்"

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x