

தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் 2-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தென்மேற்கு பருவமழைக் காலத்தில் தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் சாரல் மழை பெய்யும்.
இதனால் சுற்றுலாத் தலமான குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். பல்வேறு பகுதிகளில் இருந்தும் குற்றாலத்துக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
இதனால் சாரல் சீஸன் காலத்தில் குற்றாலம் களைகட்டி காணப்படும்.
இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை குற்றிப்பிட்ட காலத்தில் தொடங்கினாலும் போதிய மழை பெய்யவில்லை. ஒரு சில நாட்கள் மட்டும் லேசான மழை பெய்தது. பெரும்பாலான நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
அவ்வப்போது வெப்பச் சலனத்தின் காரணமாக மாவட்டத்தில் சில பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இந்நிலையில், இன்று அதிகாலை முதல் குற்றாலத்தில் சாரல் மழை மீண்டும் களைகட்டியது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் மிதமான மழையும், மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் லேசான மழையும் பெய்தது. பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்று வீசியது.
இன்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் அடவிநயினார் கோவில் அணையில் 8 மி.மீ., குண்டாறு அணையில் 7 மி.மீ., செங்கோட்டையில் 4 மி.மீ., கருப்பாநதி அணையில் 3 மி.மீ., ஆய்க்குடியில் 1.4 மி.மீ. மழை பெய்தது.
தொடர்ந்து மழை பெய்ததால் குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்தது. மதியம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது.
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் குற்றாலம் அருவிகளில் குளிக்க ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை நீடித்தது. சுற்றுலாப் பயணிகளின்றி சுற்றுலாத் தலமான குற்றாலம் வெறிச்சோடி காணப்பட்டது.