

நாகர்கோவிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., நாஞ்சில் முருகேசன் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அவரை திருநெல்வேலி மாவட்டம் உவரியில் இன்று தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
நாகர்கோவில் கோட்டாறை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி, வாலிபர் ஒருவருடன் இரு வாரங்களுக்க முன்பு காணாமல் போயிருந்தார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் மாணவி, மற்றும் அவருடன் சென்ற வாலிபரையும் போலீஸார் மீட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது இரு ஆண்டுகளுக்கு மேலாக தனது தாயாரின் ஒப்புதலுடன் பலர் தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகவும், இது பிடிக்காமல் தனக்குப் பிடித்த வாலிபருடன் சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த அதிர்ச்சி வாக்குமூலத்தால் குமரி மாவட்ட குழந்தைகள பாதுகாப்பு அதிகாரிகள் உதவியுடன் போலீஸார் மீண்டும் விசாரணை நடத்தினர். இதில் நாகர்கோவில் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் (60), நாகர்கோவிலை சேர்ந்த பால் (66), அசோக்குமார்(43), கார்த்திக் (28) ஆகியோர் தொடர்ந்து தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், இதற்கு தனது தாயாரே உடந்தையாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து நாஞ்சில் முருகேசன், சிறுமியின் தாய் உட்பட 5 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான அவர்களை பிடிப்பதற்கு மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. கணேசன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. நாஞ்சில் முருகேசன் தலைமறைவான நிலையில் அவரை தவிர சிறுமியின் தாயார் உட்பட 4 பேரையும் நேற்று இரவு போலீஸார் கைது செய்தனர்.
நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களில் சிறுமியின் தாயார் தக்கலை பெண்கள் சிறையிலும், பிற 3 பேர்களும் நாகர்கோவில் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
தலைமறைவான நாஞ்சில் முருகேசனை கைது செய்வதற்கு நாகர்கோவில் புத்தேரியில் உள்ள அவரது வீட்டை சுற்றி போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவர் திருநெல்வேலி மாவட்டத்தில் தலைமறைவாக உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் நேற்று இரவே தனிப்படை போலீஸார் அங்கு சென்று துப்பு துலக்கினர்.
உவரி அருகே இடையன்குடியில் உள்ள தோட்டம் அருகே அவர் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று போலீஸார் சுற்றி வளைத்தபோது, நாஞ்சில் முருகேசன் காரில் தப்பிச் சென்றுள்ளார். அப்போது போலீஸார் காரை பின்தொடர்ந்து சென்று அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நாஞ்சில் முருகேசனை போலீஸார இன்று மாலை நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர்.
கைது செய்யப்பட்ட நாஞ்சில் முருகேசனை நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையம் கொண்டு சென்று அங்கு போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு உடல்நிலை குறித்த பரிசோதனையும், கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நாஞ்சில் முருகேசன் சிறையில் அடைக்கப்பட்டார்.