Last Updated : 29 Jul, 2020 09:47 AM

 

Published : 29 Jul 2020 09:47 AM
Last Updated : 29 Jul 2020 09:47 AM

இன்று சர்வதேசப் புலிகள் தினம்: புலிகளை காக்கும்போது உலகின் காலநிலை மாற்றங்கள் சீராகும்

பிரதிநிதித்துவப் படம்

அழிந்து வரும் புலிகளின் இனத்தைப் பாதுகாக்கவும் அதனைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் ஜூலை 29-ம் தேதி சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளின் நோக்கம் புலிகளின் இயற்கை வாழ்விடங்களைக் காப்பாற்றுவதற்கான உலகளாவிய அமைப்பை ஏற்படுத்தி, புலிகள் பற்றியும் அதன் வாழ்விடச் சிக்கல்கள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ஆகும்.

ஒரு புலி இருக்கும் காடு பல்லுயிர் பெருக்கத்தின் அடையாளம். பல்லுயிர் பெருக்கம் மிகுந்து இருப்பது தான் சிறப்பான காடுகளின் அடிப்படை. பரந்து விரிந்தக் காடுகள், காலநிலை மாற்றங்கள் சீராக இருக்க உதவுகின்றன. சரியான காலநிலை மனிதர்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமாகிறது.

எனவே தான், இயற்கையைப் பாதுகாப்பதில் புலிகளை முன்னிலைப்படுத்தி உலகமே செயல்படுகின்றது. சர்வதேச புலிகள் தினமான இன்று, நாம் அனைவருமே, புலிகளின் கடந்த கால, நிகழ்கால வாழ்க்கையை அறிந்து, அவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு நம்மால் ஆன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

இந்நிலையில், இந்தியாவில் புலிகளின் நிலை குறித்து சேலம் இயற்கைக் கழகம் நிர்வாகி முருகேசன் கூறுகையில், "ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வரை இந்தியாவில் புலிகள், இமயமலை முதல் குமரி முனை வரை இருந்த எல்லாக் காடுகளிலும் பரவலாகக் காணப்பட்டது. ஆங்கிலேயர்கள் நம் நாட்டுக்கு வந்த பிறகு காடழிப்பு மற்றும் வேட்டையினால் புலிகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. 19-ம் நூற்றாண்டில் இந்தியாவில் ஆங்கிலேயர்களால், புலிகள் கண்மூடித்தனமாகக் கொல்லப்பட்டன. 1875-ம் ஆண்டு முதல் 1925-ம் ஆண்டு வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 80 ஆயிரம் புலிகள், 1 லட்சத்து 65 ஆயிரம் சிறுத்தைகள் இந்தியாவில் கொல்லப்பட்டன.

புலிகள் எண்ணிக்கை இந்திய வனப்பகுதிகளில் குறைந்ததால் 1930-ம் ஆண்டுக்குப் பின்னர் புலிகளை பாதுகாப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. பாதுகாக்கபட்ட வனப் பகுதிகள் ஏற்படுத்தப்பட்டு, புலிகள் வேட்டை தடை செய்யப்பட்டது. 1878-ம் ஆண்டு சென்னை மாகாணத்தில் புலிகள் அதிகளவில் இருந்ததை ஆங்கிலேயர்கள் பதிவிட்டுள்ளனர். 1830-ம் ஆண்டில், சேலத்தை அடுத்துள்ள ஏற்காட்டில் சில நாட்கள் தங்கியிருந்த மேஜர் ஹென்றி பெவன் என்ற ஆங்கிலேயர், சேர்வராயன் மலைக் காடுகளில் யானைகள், புலி, சிறுத்தை, சிவிங்கப் புலி போன்ற விலங்குகள் அதிக அளவில் இருந்ததாகக் தான் எழுதிய 'இந்தியாவில் 30 ஆண்டுகள்' (1808-1838) எனும் நூலில் குறிப்பிட்டார்.

20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் மட்டும் 1 லட்சம் புலிகள் இருந்தன. ஆனால், வேட்டை, காடழிப்பு, உணவுப் பற்றாக்குறை முதலிய காரணங்களால் தொடர்ந்து இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கைக் குறையத் தொடங்கியது. குறிப்பாக, 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புலிகளின் எண்ணிக்கை, ஆயிரங்களை நோக்கி அழிவுப் பாதையில் சென்றது. 1972-ம் ஆண்டில் நடந்த கணக்கெடுப்பில் 1,872 புலிகள் தான் இந்தியாவில் இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் புலிகளைப் பாதுகாப்பதற்காகப் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

1973-ம் ஆண்டு அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி புலிகள் பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதன்படி, புலிகள் வாழும் பகுதிகளைப் புலிகள் காப்பகமாக அறிவித்து நிதி ஒதுக்கி, அப்பகுதிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்துவது, புலி வேட்டையினைத் தடுப்பது ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, இந்தியா முழுவதும் புலிகள் காப்பகங்கள் உருவாக்கப்பட்டன. இதில் 10-க்கும் மேற்பட்ட காப்பகங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் அமைக்கப்பட்டன.

தமிழகத்தில் களக்காடு, முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் புலிகள் காப்பகங்கள் உள்ளன. இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னர், இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை மெல்ல உயரத் தொடங்கியது. 2014-ம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பில், தமிழகத்தில் 264 புலிகள் உள்ளன. இது 15 சதவீத வளர்ச்சி என்பது, தமிழர்களாகிய நமக்குப் பெருமை சேர்த்தது.

நாம் சுவாசிக்கும் காற்றில், குடிக்கும் தண்ணீரில் நம் பங்கு ஒரு துளியும் இல்லை. ஆனால், எங்கோ காட்டின் மூலையில், உலாவும் புலியின் பங்கு மிக மிக அதிகம். புலியின் உடல் பாகங்களில் எந்த ஓர் உபயோகமும் இல்லை, பெருமையும் இல்லை. உயிரோடு, கம்பீரமாக நம் காடுகளை அவை ஆட்சி செய்கையில் தான் மனிதர்களாகிய நமக்குப் பெருமையும், நன்மையும் நல்வாழ்வும் கிடைக்கின்றன என்பதை நாம் அனைவரும் இந்நாளில் உணர வேண்டும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x