Last Updated : 29 Jul, 2020 08:01 AM

 

Published : 29 Jul 2020 08:01 AM
Last Updated : 29 Jul 2020 08:01 AM

விரைவில் விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் தீவிரம்: மத்திய அமைச்சரவையில் தமிழகத்துக்கு வாய்ப்பு கிடைக்குமா?

மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில் தமிழகத்துக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2-வது முறையாக கடந்த 2019 மே 30-ம் தேதி பதவி
யேற்றது. தற்போது 23 கேபினட் அமைச்சர்கள், 9 தனிப் பொறுப்புள்ள இணை அமைச்சர்கள், 30 இணை அமைச்சர்கள் என 62
பேர் மத்திய அமைச்சர்களாக உள்ளனர்.

கேபினட் அமைச்சர்களான நிதின்கட்கரி, நரேந்திர சிங் தோமர், ரவிசங்கர் பிரசாத், ஸ்மிருதி இரானி, ஹர்ஷ்வர்தன், பிரகாஷ் ஜவடேகர், பியூஷ் கோயல், பிரகலாத் ஜோஷி ஆகியோரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. விதிகளின்படி, 82 பேர் மத்திய அமைச்சர்களாக இருக்க முடியும். பிரதமர் மோடியின் முதலாவது (2014-19) அமைச்சரவையில் 70 பேர் அமைச்சர்களாக இருந்தனர்.

கடந்த மார்ச் மாதமே அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய பிரதமர்மோடி திட்டமிட்டிருந்தார். ஆனால், கரோனா பரவல் காரணமாக இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், விரைவில் அதாவது ஆகஸ்ட் மாதத்தில் அமைச்சரவையை விரிவாக்கம் செய்வதற்கான பணிகளை மோடி தொடங்கியுள்ளார்.

பிரதமர் தீவிர ஆலோசனை

இதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், பாஜக – ஆர்எஸ்எஸ் இடையே தொடர்பாளராக இருக்கும் ஆர்எஸ்எஸ் இணைப் பொதுச் செயலாளர் கிருஷ்ணகோபால் ஆகியோருடன் பிரதமர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

யார் யாருக்கு அமைச்சர்பதவி என்பது குறித்து அவர்கள் விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளனர். மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கேபினட் அமைச்சராவது உறுதியாகி உள்ளது. விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடக்க உள்ள பிஹார், தமிழகம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங் களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது தொடர்பாகவும் ஆலோ சனை நடைபெற்றுள்ளது.

மோடியின் முதல் அமைச்சரவையில் தமிழகத்தின் பொன். ராதாகிருஷ்ணன் இணை அமைச்சராக இருந்தார். தற்போது தமிழர்களான நிர்மலா சீதாராமன் நிதி யமைச்சராகவும், எஸ்.ஜெய்சங்கர் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் உள்ளனர்.

இந்தநிலையில், மத்திய அமைச்சரவையில் தமிழகத்துக்கு இன்னும் பிரதிநிதித்துவம் அளிக்க மோடி தயாராக இருப்பதாகவும், ஆனால், சரியான நபர்கள் அமையவில்லை என்றும் கூறப்படுகிறது.

2019-ல் மோடியை பிரதமராக முன்னிறுத்தி அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதனால் மத்திய அமைச்சரவையில் இணைய அதிமுக தயக்கம் காட்டுகிறது. மக்களவையில் உறுப்பினர்கள் இல்லாததால் பாமகவை அமைச்சரவையில் சேர்ப்பதில் பாஜகவும், மத்திய அமைச்சரவையில் இணைந்தால் தமிழகத்தில் அரசியல் செய்வதில் சிக்கல் நேரும் என்று பாமகவும் தயக்கம் காட்டுகின்றன.

6 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மாநிலங்களவை உறுப்பினர் ஆகியுள்ள தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மத்திய அமைச்சராவார் என்று அக்கட்சியினர் நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர். தங்களில் ஒருவருக்கு இணை அமைச்சர் பதவியாவது கிடைக்கும் என்று தமிழக பாஜக முக்கிய தலைவர்களும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும்போதுதான் அதற்கு விடை கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x