Last Updated : 29 Jul, 2020 07:44 AM

 

Published : 29 Jul 2020 07:44 AM
Last Updated : 29 Jul 2020 07:44 AM

இன்று உலக புலிகள் தினம்: காடுகள் அழிக்கப்பட்டு வாழ்விடங்கள் சுருங்குவதால் உடைபடும் உயிர்ச் சங்கிலி

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உலவும் கம்பீரமான ஆண் புலி.

பொள்ளாச்சி

வளமான காட்டின் குறியீடாகக் கருதப்படும் புலிகளின் எண்ணிக்கை 18-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலக அளவில் ஒரு லட்சமாக இருந்தது. அவற்றில் 80 சதவீதம் இந்தியாவில் இருந்தன. சீனாவின் பாரம்பரிய மருத்துவத் தேவைக்கு புலிகளின் எலும்பு மற்றும் உடல் உறுப்புகள் தேவைப்பட்டதால், உலகம் முழுவதும் தீவிரமாக வேட்டையாடப்பட்டன. மேலும், காடுகள் அழிக்கப்பட்டு வாழ்விடங்கள் பாதிப்புக்கு உள்ளானதால், புலிகளின் அழிவு தொடங்கியது.

இதனால் 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 40 ஆயிரமாகக் குறைந்தது. தொடர்ந்து புலிகள் கொல்லப்பட்டதால் 1972-ல் வெறும் 1,827 புலிகள் மட்டுமே நாட்டில் இருந்தன. அப்போது விழித்துக் கொண்ட மத்திய அரசு, புலிகளைக் காக்க ‘ப்ராஜக்ட் டைகர்’ என்ற திட்டத்தை உருவாக்கி, நாடு முழுவதும் புலிகள் காப்பகங்களை அமைத்தது. வேட்டையும் தடை செய்யப்பட்டது. 2008-ல் 1,411-ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2010-ல் 1,706, 2014-ல் 2,226, 2018-ல் 2,967என உயர்ந்தது.

வனத்தில் சாலைகள், குடியேற்றங்கள்...

9 வகையான புலி இனங்களில், தற்போது,தென் சீனப் புலிகள், மலேய புலிகள், இந்தோ-சீனப் புலிகள், சைபீரியப் புலிகள், வங்கப் புலிகள், சுமத்ரா புலிகள் ஆகிய 6 இனங்கள் மட்டுமே உள்ளன.

வனத்தில் குடியிருப்புகள், சாலைகள், குடியேற்றங்கள், சொகுசு விடுதிகள், கட்டுப்பாடு இல்லாத சுற்றுலா, இரவு நேர வனச் சுற்றுலா ஆகியவை புலியின் வாழ்விடத்தை சுருக்கின. இதனால், புலிகளின் நடமாட்டப் பகுதியும் வெகுவாகக் குறைந்தது.

மனித நடமாட்டத்தால் பாதுகாப்பற்ற சூழலை உணரும் புலிகள், மன அழுத்தத்தால்பாதிக்கப்படுகின்றன. இவ்வாறு பாதிக்கப்பட்ட புலியின் உடலில் ‘கார்ட்டிசால் ஹார்மோன்’ சுரப்பு அதிகமாகி, உயிரணுக்கள் குறைந்து, இனப்பெருக்கமும் குறைவதாக ஆய்வில் கண்டறிப்பட்டுள்ளது.

அண்மையில், பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இரண்டு புலிகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம், புலிகள் குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதையே காட்டுகிறது என்று வேதனை தெரிவிக்கின்றனர் வன உயிரின ஆர்வலர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x