வருமானம், சாதி சான்றிதழ் வழங்குவதில் தாமதம்; கல்லூரிகளில் சேர்க்கை பாதிப்பு: மாணவர்கள் புகார்

வருமானம், சாதி சான்றிதழ் வழங்குவதில் தாமதம்; கல்லூரிகளில் சேர்க்கை பாதிப்பு: மாணவர்கள் புகார்
Updated on
1 min read

அரசு அலுவலகங்களில் வருமானம் மற்றும் சாதி சான்றிதழ்கள் வழங்க காலதாமதம் ஏற்படுவதால் கல்லூரிகளில் சேர்க்கை பாதிக்கப்படுவதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர்கல்விக்காக கல்லூரிகளில் சேரும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே கல்லூரிகளில் சேருவதற்கு சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று உள்ளிட்ட ஆவணங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். தற்போது சான்றிதழ்கள் பெறும் முறை ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

அதேநேரம் கரோனா தொற்று காரணமாக பெரும்பாலான இ-சேவை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் தனியார் இணையதள சேவை மையங்கள் மற்றும் செல்போன்கள் மூலமாக மாணவர்கள் சான்றிதழ் கோரி விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக மாணவர்கள் சிலர் கூறும்போது, ‘‘இணையவழியில் விண்ணப்பித்தால் சான்றிதழ்உடனடியாக கிடைப்பதில்லை. ஆனால், பல்வேறு கல்லூரிகள், சான்றிதழ்களை சமர்ப்பித்தால் மட்டுமே சேர்க்கை விண்ணப்பங்களை ஏற்கின்றன. எனவே, கல்லூரிகளில் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான காலஅவகாசத்தை அரசு நீட்டிக்க வேண்டும். மேலும்,அரசு அலுவலகங்களில் சான்றிதழ்களை வழங்க தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும்’’ என்றனர்.

இதற்கிடையே கரோனா தடுப்பு பணியில் பெரும்பாலான அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பலர்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். குறைந்த அளவிலான பணியாளர்கள், அலுவலகப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் நிலவுகிறது. எனவே, உரியநேரத்தில் சான்றிதழ்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in