Published : 29 Jul 2020 07:12 AM
Last Updated : 29 Jul 2020 07:12 AM

25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்; ரூ.2,368 கோடி முதலீட்டில் 8 புதிய தொழில் திட்டங்கள்: முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

தமிழக தொழில் துறை சார்பில் ரூ.2,368 கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ள 8 நிறுவனங்களின் தொழில் திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இத்திட்டங்களின் மூலம் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் மற்றும் தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளால் தமிழகத்தில் அதிக தொழில் முதலீடுகள் வந்து கொண்டிருக்கின்றன. கரோனா வைரஸ் தொற்று உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், சில குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வெளியேறும் தொழிற்சாலை களை தமிழகத்துக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தலைமைச் செயலர் சண்முகம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இதுபோன்ற நடவடிக்கைகளால் தற்போது பல் வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரோனா ஊரடங்கு காலத்தில் அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தனி யார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 25 நிறுவனங்களுடன் தமிழக அரசு செய்துகொண்ட ஒப்பந்தங்கள் மூலம் ரூ.25,527 கோடி முதலீடுகள் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரூ.2,368 கோடி மதிப்பீட்டிலான புதிய தொழில் திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

கரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டு, படிப்படியாக மீண்டெழுந்து வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை தொடர்ந்து மேம்படுத்தும் வகையில், 5 திட்டங்களுக்கு நேரடியாகவும், 3 திட்டங்களுக்குகாணொலி மூலமாகவும் முதல்வர் அடிக்கல் நாட்டி னார். அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள் விவரம்:

l செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் ரேடியல் சாலையில் ரூ.1,500 கோடி முதலீட்டில் 23 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கேபிடலேண்ட் நிறுவனத்தின் இன்டர்நேஷனல் டெக்பார்க் தகவல் தொழில்நுட்ப பூங்கா.

l செங்கல்பட்டு மாவட்டம் மஹிந்திரா வேர்ல்டு சிட்டி தொழிற்பூங்காவில் ரூ.100 கோடி முதலீட் டில் டினெக்ஸ் நிறுவனத்தின் டீசல் இன்ஜின் களுக்கான எக்சாஸ்ட் உற்பத்தி திட்டம். இதன் மூலம் 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிட்டும்.

l காஞ்சிபுரத்தில் ரூ.150 கோடி முதலீட்டில் 300 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் ஸ்டீல் ஷாப்பி நிறுவனத்தின் வாகன தொழிற்சாலைக்கான எஃகு பாகங்கள் உற்பத்தி திட்டம்.

l திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள மஹிந்திரா ஆரிஜின்ஸ் தொழிற்பூங்காவில் ரூ.105 கோடியில் 160 பேருக்கு வேலை அளிக்கும் வகை யில் ஜப்பானின் நிசே எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மின்சார, மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டம்.

l அதே தொழிற்பூங்காவில் ரூ.100 கோடி முதலீட்டில் 100 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் ஜப்பானின் உசுய் சுசிரா நிறுவனத்தின் மோட்டார் வாகன உற்பத்தி தொழிற்சாலை.

l கடலூர் மாவட்டம் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.350 கோடி முதலீட்டில் 300 பேருக்கு வேலை அளிக்கும் டாடா கெமிக்கல் நிறுவனத்தின் சிலிக்கா உற்பத்தி தொழிற்சாலை.

l அதே தொழிற்பூங்காவில் ரூ.47 கோடி முதலீட்டில் 550 பேருக்கு வேலை அளிக்கும் எம்ஆர்சி மில்ஸ் நிறுவனத்தின் டெக்ஸ்டைல்ஸ் புராசஸிங் திட்டம்.

l விழுப்புரம் மாவட்டம் கம்பூர் கிராமத்தில் ரூ.16 கோடி முதலீட்டில் 160 பேருக்கு வேலை அளிக்கும் ராஜராஜேஸ்வரி லைஃப்கேர் நிறுவனத்தின் மருந்து, மருத்துவப் பொருட்கள் உற்பத்தித் திட்டம். இந்நிறுவனம் கரோனா நிவாரண மருந்துப் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட உள்ளது. மேற்கண்ட 8 திட்டங்கள் மூலம் ரூ.2,368 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 24,870 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூரில் உள்ள வானூர்தி பூங்காவில், டிட்கோ - டைடல் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் ரூ.250 கோடி முதலீட்டில் அமைய உள்ள வானூர்தி உற்பத்தி சார்ந்த ‘ஏரோ ஹப்’ உயர்நுட்ப தொழில் மையத்துக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து, 2019-20 ஆண்டுக்கான தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (டிட்கோ) பங்கு ஈவுத்தொகை ரூ.37 கோடி, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவன (சிப்காட்) இடைக்கால பங்கு ஈவுத்தொகை ரூ.40 கோடிக்கான காசோலைகளை முதல்வர் பழனிசாமியிடம் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் கே.சண்முகம், தொழில் துறை செயலர் நா.முருகானந்தம், தமிழ்நாடு வழிகாட்டி மேலாண்மை நிறுவன மேலாண் இயக்குநர் நீரஜ் மித்தல், தொழில் வளர்ச்சி நிறுவன தலைவர் காகர்லா உஷா, சிப்காட் நிறுவன மேலாண் இயக்குநர் ஜெ.குமரகுருபரன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவன செயல் இயக்குநர் அனீஷ் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x