Published : 28 Jul 2020 10:43 PM
Last Updated : 28 Jul 2020 10:43 PM

தமிழில் 2019-ல் வெளியான சிறந்த நூல்களுக்கான பரிசுப்போட்டி : விண்ணப்பங்கள் அளிக்க தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்பு

தமிழில் கடந்த ஜன.1 2019-முதல் டிச.31 வரை வெளியான நூல்களுக்கான பரிசுப்போட்டியை தமிழக அரசு அறிவித்துள்ளது. நூல்கள் வகை வாரியாக அனுப்ப நூலாசிரியர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ் வளர்ச்சித்துறை செய்திக்குறிப்பு:

“தமிழ்நாடு வரலாற்றில் எக்காலத்திலும் இதுவரை இல்லாத அளவிற்குத் தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் தமிழறிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் அம்மா அவர்கள் எண்ணற்ற விருதுகளும் பரிசுப் பாராட்டுச் சான்றுகளும், நலத்திட்டங்களும் வழங்கிச் சிறப்பித்தார்கள். அவர்தம் உன்னத வழியில் முதல்வர் பழனிசாமி தமிழ் வளர்ச்சிக்கென பற்பல திட்டங்கள், 72 விருதுகள், பல்வேறு நலத்திட்ட உதவிகள் எனப் பன்முக வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் பல கோடி மதிப்பில் தமிழ் வளர்ச்சிக்கு திட்டங்கள் அறிவித்தும் உலக அளவில் தமிழ் மேம்பாட்டிற்கென தமிழிருக்கைகள் அமைத்திடவும் அரசு நிதியுதவி செய்து வருகிறது.

தமிழக அரசு ஆணைப்படி சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப்போட்டிக்கு 2019-ம் ஆண்டில் (01.01.2019 முதல் 31.12.2019 வரை) வெளியிடப்பட்ட நூல்கள் 33 வகைப்பாடுகளின்கீழ் வரவேற்கப்படுகின்றன. போட்டியில் ஒவ்வொரு வகைப்பாட்டிலும் ஒரு நூல் மட்டுமே தெரிவு செய்யப்பட்டு, நூலாசிரியருக்கு ரூ.30,000/-மும் அந்நூலைப் பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு ரூ.10,000/-மும் எனப் பரிசுகள் வழங்கப்பெறும்.

வகைப்பாடுகள்

1. மரபுக் கவிதை

2. புதுக் கவிதை

3. புதினம்

4. சிறுகதை

5. நாடகம் (உரைநடை, கவிதை)

6. சிறுவர் இலக்கியம்

7. திறனாய்வு

8. மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம்

9. பிற மொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள்

10. நுண்கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்)

11. அகராதி , கலைக் களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ்

12. பயண இலக்கியம்

13. வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு

14. நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிகவழிகளும், அகழாய்வு

15. கணிதவியல் , வானியல், இயற்பியல், வேதியியல்

16. பொறியியல், தொழில் நுட்பவியல்

17 மானிடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல்

18. சட்டவியல், அரசியல்

19. பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல்

20. மருந்தியல், உடலியல், நலவியல்

21. தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்)

22. சமயம், ஆன்மீகம், அளவையியல்

23. கல்வியியல், உளவியல்

24. வேளாண்மையியல், கால்நடையியல்

25. சுற்றுப்புறவியல்

26. கணினி இயல்

27. நாட்டுப்புறவியல்

28 வெளிநாட்டுத் தமிழ்ப் படைப்பிலக்கியம்

29. இதழியல், தகவல் தொடர்பு

30. பிற சிறப்பு வெளியீடுகள்

31. விளையாட்டு

32. மகளிர் இலக்கியம்

33. தமிழர் வாழ்வியல்

பரிசுப் போட்டிக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகள் கீழ்க்குறிப்பிட்ட முகவரியில் நேரிலோ, அஞ்சல் வாயிலாகவோ அல்லது இத்துறையின் வலைதளத்திலோ இலவசமாகப் www.tamilvalarchithurai.com பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தமிழ்வளர்ச்சி இயக்குநர், தமிழ்வளர்ச்சி வளாகம் முதல் தளம்,

தமிழ்ச்சாலை, எழும்பூர்,

சென்னை 600 008.

தொலைபேசி எண்கள். 28190412 , 28190413

அஞ்சல் வாயிலாகப் பெற அளவிலான சுய முகவரியிட்ட உறையில் 10 ரூபாய் அஞ்சல்வில்லை ஒட்டி அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.

போட்டிக்கான விண்ணப்பத்துடன் 10 நூற்படிகளும் போட்டிக் கட்டணம் ரூ.100/- `தமிழ்வளர்ச்சி இயக்குநர், சென்னை’ என்ற பெயரில் வங்கிக்கேட்பு வரைவோலையாக அளிக்க வேண்டும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற கடைசி நாள் 30.10.2020”

இவ்வாறு தமிழ் வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x