Published : 28 Jul 2020 10:03 PM
Last Updated : 28 Jul 2020 10:03 PM

சென்னையில் நாள்தோறும் 12,000 பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன: மாநகராட்சி ஆணையர் தகவல் 

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடையே கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதிநவீன மின்னணு (LED) வீடியோ விழிப்புணர்வு வாகனங்களை ஆணையர் பிரகாஷ் இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

''சென்னை மாநகராட்சி சார்பில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தட்டு நோய்த்தொற்று விகிதம் குறைந்து வருகிறது. அரசு அறிவித்த முழு ஊரடங்கு மற்றும் தொற்று பரிசோதனை மூன்று மடங்கு அளவிற்கு அதிகரித்து தொற்று உள்ளவர்களைக் கண்டறிந்து சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டதால் தொற்றுப் பரவல் வெகுவாகக் குறைந்துள்ளது.

நாள்தோறும் சராசரியாக 12,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சுமார் 23,000 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு 14 லட்சம் பொதுமக்கள் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் கரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்களுக்கு பரிசோதனை பரிந்துரைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று நாள்தோறும் வீடுகளுக்குச் சென்று கணக்கெடுப்பு செய்யும்போது மூச்சுத் திணறல் உள்ள நபர்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்குக் கரோனா தொற்றுப் பரிசோதனை செய்வதற்கு முன்னரே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன்மூலம் கரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பு பெருமளவு குறையும்.

சென்னையில் காய்கறிப் பொருட்கள் தட்டுப்பாடின்றியும், தேவையற்ற விலையேற்றமின்றி சரியான விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மார்க்கெட் பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கும் வகையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. அவசரத் தேவைக்காக சென்னை வருபவர்களுக்கு சரியான ஆவணங்கள் இருப்பின் இ-பாஸ் வழங்கப்படுகிறது. இதுவரை சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடத்துதல், துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல், ஒலிப்பெருக்கி பொருத்தப்பட்ட ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், வீதி நாடகங்கள் மற்றும் பொம்மலாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தற்பொழுது, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மண்டலத்திற்கு ஒரு வாகனம் என 15 அதிநவீன மின்னணு வீடியோ வாகனங்கள் மூலமாக கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக இன்று 3 வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.

இந்த வாகனங்கள் மூலம் தமிழ்நாடு அரசு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்''.

இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x