

அரசு மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் மாநில நிர்வாகி பெருமாள்பிள்ளை நம்மிடம் பேசுகையில், ''நீட் தேர்வில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்கள் மற்றும் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில், அதிலிருந்து விலக்குப் பெற தமிழக அரசு கடும் முயற்சி செய்தும், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்குப் பெற முடியவில்லை. இருப்பினும் நீட் தேர்வை எதிர்கொள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி முகாம்களைத் தொடங்கி நடத்தி வருகிறது.
இந்த நிலையில், தற்போது அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அதிக அளவில் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார் முதல்வர். தேசிய அளவில் நீட் தேர்வுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்காக முதல்வர் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டு, மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார். இதற்காக நாங்கள் தமிழக முதல்வரை மனமாரப் பாராட்டுகிறோம்.
அதேநேரத்தில், அரசு மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம், பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர் பணி இடங்களை அதிகரிப்பது, பட்டமேற்படிப்பு முடிக்கும் மருத்துவர்களுக்கு ஏற்கெனவே இருந்த முறைப்படி கலந்தாய்வு நடத்துதல் உள்ளிட்ட எங்களின் கோரிக்கையையும் தமிழக முதல்வர் பரிசீலிக்க வேண்டும் எனவும் வேண்டுகிறோம்.
நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும் மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தைத் தர அரசு மறுத்து வருகிறது. அதாவது புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கி தமிழகத்தில் அதிக அளவில் மருத்துவப் படிப்புக்கான இடங்களை உருவாக்குவோம். அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களையும் மருத்துவம் படிக்க வைத்து மருத்துவராக்குவோம் என்று சொல்லும் அரசு, அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் மட்டும் தரமாட்டோம் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்?
இந்தக் கேள்வியில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டு அரசு மருத்துவர்களுக்கு அரசாணை எண் 354-ன் படி உரிய ஊதிய உயர்வை வழங்க வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் மருத்துவப் படிப்பில் ஆர்வமாகச் சேர்வதோடு, அரசு மருத்துவர்கள் இன்னும் சிறப்பாகப் பணி செய்யவும் வழிவகுக்கும். அதேபோல் அரசு மருத்துவர்களுக்குப் பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
இதன் மூலம் நம்முடைய சுகாதாரக் கட்டமைப்பைத் தொடர்ந்து சிறப்பாக நிலைநிறுத்த முடியும். இந்தத் திட்டம் அமலில் இருந்தால் மருத்துவர்கள் ஆர்வமுடன் அரசுப் பணியில் சேருவார்கள். இதன் மூலம் கிராமங்களுக்கும் உரிய மருத்துவ வசதியை அளிக்க முடியும். எனவே இந்த நேரத்தில் எங்களின் இந்தக் கோரிக்கைகளையும் அரசு பரிசீலிக்க வேண்டும்'' என்றார்.