

தமிழர்களைப் புறக்கணிப்பது காலங்காலமாக நடந்து வருகிறது என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் புகார் குறித்து எம்.எல்.ஏ., கருணாஸ் கருத்து தெரிவித்தார்.
முன்னதாக, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பேட்டியில், தனக்கு பாலிவுட் வாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பதில் ஒரு கும்பலே செயல்பட்டதாகத் தெரிவித்திருந்தார். இதனை சுட்டிக்காட்டி கருணாஸ் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் கோவில்பட்டியில் நடந்தது.
முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர் கருணாஸ் எம்எல்ஏ கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில், கொள்கை பரப்புச் செயலாளர் குமாரசாமி, அமைப்பு செயலாளர் பவானி வேல்முருகன், தென்மண்டல அமைப்புச் செயலாளர் குமாரசாமி, தெற்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன், வடக்கு மாவட்ட செயலாளர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கருணாஸ் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறும்போது, "முக்குலத்தோர் புலிப்படை அமைப்புக்கான அரசியல் அங்கீகாரம் காட்டியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
அவர் உருவாக்கிய ஆட்சிக்கு, எங்களால் எந்த விதத்திலும் இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். அதனால்தான் தற்போது வரை வெளிப்படையாகவே நாங்கள் அதிமுகவுக்கு முழு ஆதரவு கொடுத்து இருக்கிறோம்.
வரக்கூடிய தேர்தல் என்பது, அந்த நேரத்தில் அரசியல் நிலைப்பாடுகளைப் பொருத்து, எங்கள் அமைப்பின் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
நகைச்சுவை நடிகனாக பணியாற்றி அதில் கிடைத்த எனது சொந்தப் பணத்தில் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்துக்கு வந்த 153 பேரை பட்டதாரிகளாக உருவாக்கியதே மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன்.
மேலும், இயன்றதை இயலாதவர்களுக்கு செய்ய வேண்டும் என்பதே முக்குலத்தோர் புலிப்படையின் கொள்கை.
வட இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் இடையே பாகுபாடு என்பது நீண்டகாலமாக இருந்து வருகிறது. இது புராண காலத்திலிருந்தே நடந்து வருகிறது. வட இந்தியர்கள் தமிழர்களைப் புறக்கணிப்பதும், தமிழர்களின் வரலாற்றை புறந்தள்ளுவதும் நடந்து வருகிறது.
1801-ம் ஆண்டுக்கு முன் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட முதல் வீராங்கனை தமிழகத்தைச் சேர்ந்த வேலு நாச்சியார் தான். இதனை ஆங்கிலேயர்கள் எழுதின வரலாற்று புத்தகத்திலேயே தெரிவித்துள்ளனர்.
ஆனால் அதனை மறைத்து வட இந்தியர்கள் ஜான்சிராணியை முன்னிலைப்படுத்துகின்றனர். இந்த வேறுபாடு பாகுபாடுதான் ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் வரை தொடர்கிறது.
நகரத்தில் வாழ்ந்த தமிழர்கள் புறநகருக்குச் சென்று விட்டனர். ஆனால் எங்கிருந்தோ சப்பாத்தியை பார்சல் செய்து கொண்டு வந்த வட இந்தியர்கள் நகரங்களை ஆக்கிரமித்து விட்டனர்.
அதேபோல், வட இந்தியாவிலிருந்து தமிழகம் வருவோருக்கு ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை என்ற திட்டத்தில் குடும்ப அட்டை வழங்கப்படும் எனக் கூறுகின்றனர்.
இதனால் வரும் காலங்களில் ஒரு கோடி உறுப்பினர் கொண்ட நாங்கள் என பெருமை பேசிய இவர்களுக்கெல்லாம் சவுக்கடியாக, 2 கோடி பேருக்கு மேல் வட இந்தியர்களே ஓட்டுரிமை பெற்றவர்களாக உருவாகும் என்பதுதான் நிசப்தமான உண்மை.
அதனை ஆதரிப்பவர்கள் ஆதரிக்கலாம். அன்றைக்கு இந்த மண்ணைவிட்டு ஓடத் தயாராகவும் இருக்கலாம். எது உங்களுக்கு கைகொடுக்கும் என்பதை மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.
கரோனா வைரஸ் பிரச்சினைகள் மிகப்பெரிய உலக நாடுகளே தோற்றுப் போன நிலையில், இந்தியா மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
அதிலும் குறிப்பாக தமிழக அரசு, சுகாதாரத்துறை உள்ளிட்ட முக்கியமான துறைகள் அனைத்தும் இணைந்து இந்த தொற்று நோயை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
மக்களுக்கு பாரபட்சமில்லாமல் மருத்துவத்தை இந்த அரசு மிக நல்ல முறையில் செய்து கொண்டுள்ளது. இதற்கு முக்குலத்தோர் புலிப்படை சார்பில் வாழ்த்துக்கள்" என்றார்.