

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முகக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதால் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பதாக, மாவட்ட கரோனா தடுப்பு சிறப்பு கண்காணிப்பு அதிகாரி லட்சுமி பிரியா தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக வணிகவரி கூடுதல் ஆணையரும் ராணிப்பேட்டை மாவட்ட கரோனா தடுப்பு சிறப்பு கண்காணிப்பு அதிகாரியுமான லட்சுமி பிரியா தலைமையில் இன்று (ஜூலை 28) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சிறப்பு கண்காணிப்பு அதிகாரி லட்சுமி பிரியா கூறும்போது, "ராணிப்பேட்டை மாவட்டத்தில் தற்போது 4,306 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 60 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகள் மற்றும் கரோனா கண்காணிப்பு மையங்களில் தற்போது 1,658 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அடிப்படை கட்டமைப்புகளைப் பொறுத்தவரை அரசு மருத்துவமனைகளில் 300 பேருக்கு பிராண வாயு சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளது. மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கான போதிய படுக்கை வசதிகள் இருக்கின்றன. கூடுதலாக 1,400 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் கரோனா பரிசோதனை 6,000 என்றளவில் இருந்தது. அதிக பரிசோதனைகள் காரணமாக இந்த எண்ணிக்கை ஜூலை மாதத்தில் 14 ஆயிரமாக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகமாக இருப்பதற்கு முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் குறைவாகவே இருக்கிறது. எனவே, முகக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு வரும் நாட்களில் உள்ளாட்சி அமைப்புகள், காவல் துறையினர் மூலமாக அதிக அளவில் மேற்கொள்ளப்படும்.
கரோனா நோயாளிகள் ஒவ்வொருவருக்கும் தினமும் ரூ.250 வீதம் உணவுக்காக செலவு செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒவ்வொருவருக்கும் ரூ.200 வீதம் செலவிடப்படுகிறது. கரோனா நோயாளிகள் பயன்பாட்டுக்காக 7 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தனியாக உள்ளன. வாகனப் பற்றாக்குறையை ஈடு செய்ய அரசுப் பேருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆகஸ்ட் 4-ம் தேதி நிலவரப்படி கரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,200 ஆக இருக்கும். இதில், 50 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பார்கள் என்ற அடிப்படையில் 4,000 பேர் சிகிச்சை பெறும் நிலையில் இருப்பார்கள். மாவட்டத்தில் தற்போது 3,200 படுக்கை வசதிகள் உள்ள நிலையில் கூடுதலாக 1,600 படுக்கை வசதிகள் செய்யப்படும்.
மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 80 சதவீதம் பேர் எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கின்றனர். கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு சரியான நேரத்தில் தரமாக வழங்கப்படுகிறதா? என்பது ஒவ்வொரு வேளையும் கண்காணிக்கப்படுகிறது. கரோனா பரிசோதனை முடிவுகள் விரைந்து தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாலாஜா அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்யும் பணி 27-ம் தேதி முதல் தொடங்கியுள்ளது" என்று தெரிவித்தார்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.