

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 343 பேருக்கு கரோனா தொற்று இன்று கண்டறியப்பட்டுள்ளது. பழவூரில் 13 போலீஸாருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து காவல் நிலையம் 3 நாட்களுக்கு மூடப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நாளுக்குநாள் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 200-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டுவந்த நிலையில் இன்று ஒரே நாளில் 343 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
அதன்படி திருநெல்வேலி மாநகரில் மட்டும் 129 பேரும், அம்பாசமுத்திரத்தில் 10, சேரன்மகாதேவியில் 24, களக்காட்டில் 9, மானூரில் 22, நாங்குநேரியில் 26, பாளையங்கோட்டையில் 36, பாப்பாக்குடியில் 15, ராதாபுரத்தில் 3, வள்ளியூரில் 69 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பழவூரில் காவல் நிலையத்தில் கடந்த 2 நாட்களுக்குமுன் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து காவல் நிலையம் 3 நாட்களுக்கு மூடப்பட்டிருந்த நிலையில் அங்கு பணிபுரிந்த 13 போலீஸாருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் காவல் நிலையம் மேலும் 3 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பேட்டையில் கிராம நிர்வாக அலுவலருக்கு கரோனா பாதிப்பை அடுத்து கிராம நிர்வாக அலுவலகம் மூடப்பட்டது.
நாங்குநேரி காவல் நிலையம் மூடல்
நாங்குநேரி காவல் நிலையத்தில் போலீஸாருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து காவல் நிலையம் 3 நாட்களுக்கு இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.